2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

செலான் வங்கி வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 2.3 பில்லியன்

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கி தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஹால் ஜயமான்ன

2013 டிசெம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டில் செலான் வங்கி சாதனைமிகு வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 2,315 மில்லியனை பெற்றுக் கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட ரூபா 2,064 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்துடன் ஒப்பிடுகையில் இது மனதில் பதியத்தக்க விதத்திலான 12% வளர்ச்சியாக காணப்படுகின்றது.

2013 இன் 4ஆம் காலாண்டுக்கான (இறுதிக் காலாண்டின்) வரிக்குப் பின்னரான இலாபாமாக ரூபா 780 மில்லியன் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதியில் (கடந்த நிதியாண்டின் 4ஆம் காலாண்டு) பதிவு செய்யப்பட்ட ரூபா 466 மில்லியனுடன் ஒப்பிட்டு நோக்குகையில் இது 67% வளர்ச்சி ஒன்றை பிரதிபலிக்கின்றது.

குறைந்த மட்டத்திலான கடன் வளர்ச்சி மற்றும் வட்டி வீதங்களில் துறைவாரியான அழுத்தம் என்பவற்றுக்கு மத்தியிலும் செலான் வங்கியின் தேறிய வட்டி வருமானமானது ரூபா 9,014 மில்லியனில் இருந்து 2013 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த 12 மாத காலப் பகுதியிலும் ரூபா 9,830 மில்லியனாக அதிகரித்தது. கட்டணம் மற்றும் தரகு வருமானம் ரூபா 1,695 மில்லியனில் இருந்து ரூபா 2,127 மில்லியனாக 25.5% இனால் அதிகரித்தது. இது, கடந்த பல வருடங்களில் பிரதம வங்கியியல் (Core Banking) தொழிற்பாடுகளில் செலான் வங்கி அடைந்து கொண்டுள்ள உறுதியான வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பயனை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டில் செலான் வங்கியானது செலவுகளை கட்டுப்படுத்தும் விடயத்திலும் குறிப்பிடத்தக்க கவனத்தைச் செலுத்திச் செயற்பட்டுள்ளது. செயற்றிறன்மிக்க செலவுக் கட்டுப்படுத்தல் முன்னெடுப்புக்கள் பலவற்றின் பலனாக, 2012ஆம் ஆண்டில் ரூபா 3,299 மில்லியனாக பதிவாகிய மொத்த ஏனைய செலவுகள் 2013 இல் 3,091 மில்லியனாக 6% இனால் குறைவடைந்தது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டமையின் காரணமாக வங்கியின் மொத்த ஆளணிசார் செலவுகள் 13% இனால் அதிகரித்தன.

செலான் வங்கி பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன

அதேவேளை, செலான் வங்கியானது 2013 பெப்ரவரி மாதத்தில் பிரதம வங்கியியல் முறைமை தரமேம்படுத்தல் ஒன்றையும் வெற்றிகரமாக மேற்கொண்டது. இத் தரமேம்படுத்தலானது வங்கியின் செயன்முறையில் முன்னேற்றத்தை கொண்டு வருவதன் ஊடாக, எதிர்வரும் வருடங்களில் கணிசமானளவு செலவுச் சிக்கனம் ஏற்படும். செலான் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு வழிவகுக்கக் கூடிய பல மேலதிக செயற்பாட்டு வசதிகளையும் மேற்படி தரமேம்படுத்தல் வழங்கும்.

செலான் வங்கி தனது வைப்புத் தளத்தை ரூபா 146.7 பில்லியனில் இருந்து 2013ஆம் ஆண்டில் ரூபா 167.3 பில்லியனாக 14% இனால் வளர்ச்சியடையச் செய்திருக்கின்றது. அதேபோன்று, ரூபா 124.7 பில்லியனாக பதிவு காணப்பட்ட வங்கியின் தேறிய முற்பண வகைகளின் பெறுமதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ரூபா 136.6 பில்லியனாக 9.5% இனால் அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் - சொத்துத் தரமானது தரம்குறைந்து போகின்ற ஒருவித போக்கு துறைவாரியாக காணப்பட்ட போதிலும் கூட, செயலாற்றலுள்ள மீள்-அறவீட்டு மற்றும் புனருத்தாரன முயற்சிகளின் ஊடாக தனது சொத்துத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்த ஒரு சில வங்கிகளுள் ஒன்றாக செலான் வங்கியும் திகழ்கின்றது. இம் முன்முயற்சிகளின் பெறுபேறாக, 2012 டிசம்பர் மாதத்தில் 12.99% ஆக பதிவு செய்யப்பட்டிருந்த மொத்த செயற்படா சொத்துக்களின் (IIS இன் தேறிய) பெறுமதி 2013 டிசம்பர் மாத இறுதியில் 10.58% ஆக குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவடைந்தது. 

'Fitch Rating' ஆனது 2013 செப்டெம்பர் மாதத்தில் செலான் வங்கி மீதான தரப்படுத்தலை ஒரு உறுதியான கணிப்புடன் 'A-lka' என உறுதி செய்தது. 

2016ஆம் ஆண்டுக்காக வகுக்கப்பட்டுள்ள தனது தற்போதைய உபாய திட்டத்தை பரிசீலனை செய்தல், தரமேம்படுத்தல் மற்றும் விஸ்தரித்தல் போன்ற பணிகளையும் வங்கி தற்போது வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. அந்த அடிப்படையில் கவனம் செலுத்தப்படும் பிரிவுகளுள் - முற்பணஃவைப்பு வளர்ச்சி, கிளை விஸ்தரிப்பு, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, ஊழியர் அபிவிருத்தி, செயற்படா சொத்து பெறுமதியை குறைத்தல், செலவுக் கட்டுப்பாடு, புதிய சேவைகளை உருவாக்குதல், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, பங்குதாரர்களின் பெறுமதி போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. 4 வருட காலப் பகுதியில் நாட்டிலுள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் 100 நூலகங்களை திறக்கும் முன்னெடுப்பு பற்றியும் இந்த உபாய திட்டம் குறித்துரைத்துள்ளது. 2013இன் இரண்டாவது அரையாண்டின் பிற்பகுதியில் இவ்வாறான 11 பாடசாலை நூலகங்கள் செலான் வங்கியால் திறந்து வைக்கப்பட்டன.

செலான் வங்கி 2013ஆம் ஆண்டில் 04 புதிய கிளைகளை திறந்துள்ளதுடன், 16 கிளைகளை முழுமையாக மறுசீரமைத்துள்ளது. அதேநேரம் மேலும் 06 கிளைகளை வாடிக்கையாளர்களுக்கு வசதியான வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்திருக்கின்றது. 2013 டிசம்பர் 31ஆம் திகதி  இருந்தவாறு செலான் வங்கி வலையமைப்பானது 151 கிளைகள், 158 ATM நிலையங்கள் மற்றும் 86 மாணவர் சேமிப்பு மையங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

2013 டிசம்பர் 31ஆம் திகதியன்று இருந்தவாறு செலான் வங்கியின் 'மூலதன நிறைவு வீதம்' 15.75% ஆக முன்னேற்றம் கண்டிருந்தது. இத்துறையின் ஒழுங்குபடுத்துனரால் வரையறை செய்யப்பட்;;டிருக்கும் மட்டத்தை விடவும் இது மிகவும் அதிகமானதாகும்.

செலான் வங்கி 2013ஆம் நிதியாண்டில் இவ்வாறான ஸ்திரமான நிதிப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டதன் பயனாக, பங்கொன்றிற்கான உழைப்பு ரூபா 6.74 ஆக (தொகுதி ரூபா 6.78) அதிகரித்துள்ளது. (வரிக்கு முன்னரான இலாபத்தில்) சொத்துக்கள் மீதான வருமானம் மற்றும் உரிமை மீதான வருமானம் ஆகியவை முறையே 1.72% ஆகவும் 11.4% ஆகவும் காணப்பட்டது. அதேவேளை, 2013 டிசம்பர் 31 இல் இருந்தபடி செலான் வங்கியின் பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 63.08 ஆக (தொகுதி ரூபா. 65.69) காணப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X