2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

செலான் வங்கி வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 3.18 பில்லியனை பதிவு செய்துள்ளது

A.P.Mathan   / 2013 மார்ச் 15 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது, 2012 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த 12 மாத காலப் பகுதியில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 3.184 பில்லியனைப் பெற்றுக் கொண்டதன் மூலம் மனம் கவரத்தக்க நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. வங்கியின் வரலாற்றில் முதற்தடவையாக வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 2 பில்லியனையும் தாண்டிச் சென்றதுடன், இதன் பெறுமதி ரூபா 2.049 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது. இவ்வருடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் தராதரமான SLFRS/LKAS இன் பிரகாரம் குறித்துரைக்கப்பட்ட ரூபா 665 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 208% அதிகரிப்பாகவும் அமைந்துள்ளது.

கடன் வளர்ச்சி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வட்டி எல்லைகள் மீதான துறைசார் அழுத்தம் போன்றவற்றுக்கு மத்தியிலும், 2012 இல் முடிவடைந்த 12 மாதங்களில் வங்கியின் தேறிய வட்டி வருமானம் 4.76 வீதத்தினால் அதிகரித்து ரூபா 9.020 பில்லியனாகியுள்ளது. தரப்படுத்தப்பட்ட முற்பணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சியின் பயனாக இந்த அதிகரிப்பு எட்டப் பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் ரூபா 1.434 பில்லியனில் இருந்து ரூபா 1.694 பில்லியனாக அதிகரித்துள்ளது. இறக்குமதி சார்ந்த செயற்பாடுகளில் ஒட்டுமொத்தமான வீழ்ச்சி காணப்பட்ட நிலையிலும், ஏனைய பல வர்த்தகங்கள் மற்றும் கட்டண வருமானம் உழைத்துத்தரும் சேவைகளில் செலான் வங்கி தமது நடவடிக்கைகளை பரவலாக்கியதன் மூலமாகவே இவ் அதிகரிப்பு அடைந்து கொள்ளப்பட்டுள்ளது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் தனது மேந்தலைச் செலவுகளை கட்டுப்படுத்துவதில் செலான் வங்கி கணிசமான கவனத்தைச் செலுத்தியது. கொழும்பிலும் அதனைக் சூழவுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள வங்கியின் கட்டிடங்கள் தொடர்பில் அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கமைய குறிப்பிட்ட கிளைக் கட்டிடங்கள் கேந்திர முக்கியத்துவமிக்க பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. செலவுச் செயற்றிறன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக இவ்வருட இறுதி நிதிப் பெறுபேறுகளில் நேரடியாவே முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை தெளிவாக காணக் கூடியதாக உள்ளது.

வங்கி தனது வைப்புத்தளம் மற்றும் தேறிய முற்பண வகைகள் ஆகியவற்றின் பெறுமதிகளை முறையே ரூபா 22.7 பில்லியன் (18.35%) மற்றும் ரூபா 18.3 பில்லியன் (17.24%) இனால் அதிகரித்துக் கொண்டுள்ளது. வைப்புகள் தொடர்பான கடுமையான போட்டி நிலை மற்றும் வட்டி வீதங்கள் உயர்வடைந்து செல்லும் சூழல் போன்றவற்றுக்கு மத்தியிலேயே வங்கி இந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. அதேநேரம் மையப்படுத்தப்பட்ட, ஸ்திரமான மற்றும் செயல் திறன்மிக்க மீள்-அறவீட்டு செயற்பாடுகளின் ஊடாக 2009ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தனது சொத்துத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு வங்கியினால் இயலுமாகியுள்ளது. இதன்மூலம் செயற்படா கடன் (NPA) வீதத்தை (IIS தேறிய பெறுமதி) 2011ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 14.24% இலிருந்து 2012 ஆம் ஆண்டின் இறுதியில் 12.99% ஆக குறைத்துக் கொள்ளவும் வங்கிக்கு வழிவகுத்துள்ளது.

செலான் வங்கியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு. நிஹால் ஜயமான்ன கருத்துத் தெரிவிக்கையில், 'நாம் முன்னெடுக்கும் உபாய ரீதியிலான செயற்பாடுகள், எம்மால் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை உழைத்துத் தருவதற்கு ஆரம்பித்துள்ளன என்பதை இந்த நிதிப் பெறுபேறுகள் நிரூபிக்கின்ற அதேவேளை, ஸ்திரமான வளர்ச்சியை வங்கியானது அடைந்து கொள்வதற்கு ஏதுவான மிகச் சிறந்ததொரு அடித்தளத்தையும் எமக்கு வழங்கியுள்ளது' என்று கூறினார்.

2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் செலான் வங்கியானது 15 புதிய கிளைகள் / சொகுசு வங்கிச் சேவை நிலையங்களை திறந்து வைத்துள்ளதுடன், 17 கிளைகள் / சொகுசு வங்கிச் சேவை நிலைங்களை புதுப் பொலிவுடன் புதுப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி ஏனைய பல கிளைகளும் வாடிக்கையாளருக்கு நட்புறவான அமைவிடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளன. 2012 டிசம்பர் 31 ஆம் திகதியன்று இருந்தவாறு 147 கிளைகளையும், 154 ATM மையங்களையும், 81 மாணவர் சேமிப்பு நிலையங்களையும் செலான் வங்கியின் வலையமைப்பு உள்ளடக்கியுள்ளது.

எதிர்கால வளர்ச்சிக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளும் விதத்தில் செலான் வங்கியானது, வழங்கல் ஆரம்பமாகிய தினத்திலேயே 'மிகையாக கோரப்பட்ட' வெற்றிகரமான ஒரு கடன் பத்திர வழங்கலை பெப்ரவரி மாதத்தில் மேற்கொண்டதன் ஊடாக தனக்கு அவசியமான நிதியைத் திரட்டிக் கொண்டுள்ளது. வங்கியின் எதிர்கால வளர்ச்சி உபாயங்களின் அடிப்படையிலமைந்த இனம் காணப்பட்ட முக்கிய பிரிவுகளில் எதிர்வரும் வருடங்களில் முதலீடு செய்வதற்கு வங்கி முனைப்புடன் இருக்கின்றது. இவ்வாறான பிரிவுகளுள் - புதிய சேவைகள் உருவாக்கம், கிளை விஸ்தரிப்பு, சேவைத் தர மேம்படுத்தல், ஊழியர் பயிற்சியளித்தல் மற்றும் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்ப (IT) உட்கட்டமைப்பு போன்றவையும் உள்ளடங்கும்.

கவர்ச்சிகரமான நிதிச் செயற்பாடுகளின் விளைவாக 'பங்கு ஒன்றின் மீதான உழைப்பு' ரூபா 6.06 ஆக முன்னேற்றம் கண்டுள்ளது. அதேநேரம், சொத்துக்கள் மீதான வருமானம் (வரிக்கு முன்னரான இலாபம்) மற்றும் பங்குகள் மீதான வருமானம் ஆகியவை முறையே 1.82% ஆகவும், 11.25% ஆகவும் உயர்வடைந்துள்ளன.

செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கபில ஆரியரத்ன கூறுகையில், 'மிகச் சிறந்த குழுப் பணியுடன் இணைந்த விதத்திலான எமது உபாய திட்டங்களை விடமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்கான ஒரு பொதுவான தூரநோக்கு, ஒரு விசேட கவனம் மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு போன்ற சிறப்பம்சங்கள் குறிப்பிடத்தக்க நிதிப் பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கு பங்களிப்புச் செய்துள்ளன. அதன் காரணமாக இதுவரைக்குமான மிகச் சிறந்ததொரு நிதியாண்டாக இது அமைந்துள்ளது' என்றார்.

செலான் வங்கி தனது 25ஆவது ஆண்டு நிறைவை 2013 மார்ச் மாதம் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .