
வட்டியின்றி இலங்கையில் இயங்கிவரும்; ஒரேயொரு உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி 2014ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து மாதாந்த தொழிற்பாட்டு இலாபத்தை பதிவுசெய்ய ஆரம்பித்துள்ளது.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்திற்கு அண்மையில் வெளியிடப்பட்ட காலாண்டு நிதிக் கூற்றுக்களுக்கு அமைய, வங்கியின் உயர்தரத்திலான செயலாற்றுகையானது 2014ம் ஆண்டின் முதல் 9 மாத காலப் பகுதிக்குரிய ஒரு சிறப்பு வளர்ச்சியை எடுத்துக் காட்டியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வங்கியின் நிதியளிப்பு வருமானம் 43% ஆல் அதிகரித்து 1,798 மில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ள அதேவேளை, நிகர நிதியளிப்பு வருமானம் 85% ஆல் அதிகரித்து 900 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதே காலப் பகுதியில் வங்கியின் மொத்த இயக்க வருமானம் 58% ஆல் அதிகரித்து 1,215 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
வங்கியின் பிரத்தியேக வர்த்தக திட்டத்தின் அங்கீகாரம் மற்றும் பிரபல்யம் காரணமாக, வங்கியின் முற்பண மற்றும் வைப்பு அலகுகள் 2014 செப்டெம்பர் 30ம் திகதியுடன் நிறைவுபெற்ற முதல் 9 மாத காலப் பகுதிக்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மொத்த முற்பண கொடுப்பனவின் பெறுமானம் 31% ஆல் அதிகரித்து 19,668 மில்லியன் ரூபாவை அடைந்துள்ள அதேவேளை, மொத்த வைப்புக்கள் 46% ஆல் அதிகரித்து 26,302 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த வளர்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்த வியாபார முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' சவால்மிக்க சூழ்நிலையில் இந்த வங்கி அடைந்துள்ள இந்த முன்னேற்றம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். 2014ம் ஆண்டின் முதல் 09 மாத காலப் பகுதியில், நுகர்வோர், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி, திறைசேறி தொழிற்பாடுகளுடனான கூட்டு வங்கித் தொழிற்பாடு போன்ற அனைத்து வியாபார துறைகளிலும் நாம் ஒரு சிறந்த வளர்ச்சிப் போக்கை கண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சியின் பயனாக, 2014ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து மாதாந்த அடிப்படையில் இலாபத்தை சரிசமன் செய்து கொள்ளும் ஒரு மட்டத்தை வங்கியால் அடைய முடிந்துள்ளது. இந்த நிலைமையை தொடர்ந்தும் எமது திட்டங்களுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.' என்றார்.
இந்த குறிப்பிடத்தக்க நிதி முன்னேற்றத்திற்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக அண்மையில் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டது.
வட்டி சாராத இஸ்லாமிய வங்கிக் முறையுடன் முற்றிலும் செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி கொழும்பு திரி சவி சபைப் பங்குப் பரிவர்த்தனையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தனது மூலோபாய பங்காளிகளான மலேஷியா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷின் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.