
இலங்கையின் முன்னணி நிதிக் கம்பனிகளுள் ஒன்றாக திகழ்கின்ற கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின் 2014 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான தேறிய இலாபம் ரூபா 1 பில்லியனை எட்டியுள்ள நிலையில் 48% வளர்ச்சியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2012 / 2013 நிதியாண்டில் கொமர்ஷல் கிரெடிட் பெற்றுக் கொண்ட ரூபா 0.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பு ஒன்றினை பதிவு செய்கின்றது.
'எமது கம்பனியின் வரலாற்றுக் குறிப்புக்களின் பிரகாரம் ரூபா 1 பில்லியனை இலாபமாக பெற்றுக் கொண்ட முதல் வருடமாக இவ்வருடம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இது தன்னளவில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை அடைவாக காணப்படுகின்ற போதிலும், இத்துறையினால் எதிர்கொள்ளப்பட்ட ஒரு சவால்மிக்க வருடமாகவும் இந்த வருடம் கருதப்படுகின்றது' என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த ஆண்டில் கம்பனியின் மொத்த சொத்துக்கள் 73.1% இனால் அதிகரித்து, ரூபா 31.6 பில்லியனாக பதிவாகியுள்ளது. அதேநேரம் வட்டி வருமானம் 74.5% அதிகரிப்போடு ரூபா 6.9 பில்லியனாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது' என்றார்.
'கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட சிறந்த தொழிற்பாடுகளின் பக்கபலத்தினால் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. உண்மையில், 'கடன் வழங்கல் தொடர்களில்' ஏற்பட்ட வளர்ச்சியினால் இது முன்கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. உண்மையாகவே இது மிகுந்த கடன்திறன் தரப்படுத்தலை (Creditworthy) கொண்டதாகும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் தலைவர் சிசில் பெரேரா, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் விதத்தில் கம்பனி தனது சேவை வலையமைப்பை கணிசமாக விஸ்தரித்துள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'விஸ்தரிக்கப்பட்ட இச்சேவை வலையமைப்பின் துணையுடன் தனது வர்த்தக நடவடிக்கைகளை இன்னும் அபிவிருத்தி செய்யக்கூடிய அளவுக்கு கொமர்ஷல் கிரெடிட் சிறப்பாக நிலைபெற்றுள்ளது. 2013 /2014 நிதியாண்டு காலப் பகுதியில் கம்பனி தனது சேவை வலையமைப்பை 60 அமைவிடங்களில் இருந்து 75 இடங்களுக்கு விஸ்தரித்து இருக்கின்றது. இவ்வாறு விஸ்தரிப்புச் செய்வதற்கான இடங்களை தெரிவு செய்யும் போது, தற்போதைய மற்றும் எதிர்கால வணிக ரீதியான உள்ளார்ந்த சாத்தியக்கூறுகளை மட்டும் கம்பனி கருத்திற் கொள்வதில்லை. மாறாக, அவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகளையும் கவனத்தில் கொண்டு செயற்படுகின்றது. எமது வைப்புத் தளம் 73.7% இனால் வளர்ச்சி கண்டிருக்கின்றது. கம்பனி முக்கியத்துவம் கொடுத்து பேணி வருகின்ற, கொமர்ஷல் கிரெடிட் வர்த்தக குறியீட்டின் மீதான பொது மக்களின் மிகப் பெரிய நம்பிக்கை மற்றும் பற்றுறுதியை இது வெளிப்படுத்துகின்றது' என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், எந்தவொரு நிறுவனத்தினதும் வெற்றி என்பது அதனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் பற்றுறுதியை அடிப்படையாகக் கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது. நாம் நிதியியல் சேவைகள் துறையில் செயற்படுகின்ற நிலையில், எமது கம்பனியைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்களவுக்கு அவ்வாறு நடந்துள்ளது என நாம் நம்புகின்றோம்' என்றார்.
2014ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் உள்நாட்டு பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட பல்வேறு அளவுருக்கள் (Parameters) எதிர்பார்க்கைகளையும் விடக் குறைவான செயற்பாட்டை வெளிப்படுத்தியிருந்தன. எவ்வாறிருப்பினும் எதிர்பார்ப்புமிகு இலங்கையின் வளர்ச்சித் திட்டங்கள், 2016ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக 4,000 அமெரிக்க டொலரை அடைந்து கொள்ளும் வழித்தடத்தில் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்று அதிகார தரப்பினர் நம்பிக்கையுடன் உள்ளனர். புத்தாக்கம், துரிதமான வளர்ச்சி மற்றும் விஸ்தரிப்பு போன்ற பண்பியல்புகளால் வகைப்படுத்தப்பட்ட கொமர்ஷல் கிரெடிட் போன்ற நிதியியல் நிறுவனங்களுக்கு, மேற்படி அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்வதற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அவர் மேலும் கூறுகையில், 'உறுதியாக தோற்றம் பெறவுள்ள இந்த சாதக வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதற்காக - மிக விரைவாக வளர்ச்சியடைந்து செல்லும் சேவை வலையமைப்பு மற்றும் மிகப் பெரிய, விசுவாசமுள்ள வாடிக்கையாளர் தளம் என்பவற்றின் துணையுடன் எமது கம்பனி தயார் நிலையிலுள்ளது' என்றார்.
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் மிகச் சிறப்பான கடந்தகால பதிவுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் முதன்னிலை சந்தையில் தனியார் பங்கு முதலீட்டாளராக திகழ்கின்ற ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோவை தளமாகக் கொண்டியங்கும் கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கெப்பிட்டல் மெனேஜ்மன்ற் எல்.எல்.சி., நிறுவனமானது தனக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமான கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஸ்ரீலங்கா எல்.எல்.சி. ஊடாக ரூபா 1.68 பில்லியனை கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தில் முதலீடு செய்ய இவ்வருடத்தின் ஆரம்பத்தில் உடன்பட்டுள்ளது. சர்வதேச தனியார் பங்கு நிதியம் ஒன்றினால் பகிரங்கமாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் உரிமம்பெற்ற நிதிக் கம்பனி ஒன்றில் மேற்கொள்ளப்படுகின்ற மிகப் பெரிய அளவிலான முதலீடாக இது காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி, கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் மீதான ஒரு உறுதியான மதிப்பீடாகவும் இது அமைந்துள்ளது.
'இப் பிராந்தியத்தில் இருக்கும் வளர்ச்சியடைந்து வருகின்ற சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், இலங்கையின் நிதியியல் சேவைகள் துறையில் அவர்கள் உயர்ந்த மட்டத்திலான ஈடுபாட்டை வெளிப்படுத்துவதற்கு மேற்படி கொடுக்கல் வாங்கலின் ஊடாக கம்பனி உருவாக்கிக் கொண்டுள்ள ஒன்றிணைவானது தூண்டுகோலாக அமையும். கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துடனான எமது கம்பனியின் உறவானது எதிர்வரும் வருடங்களில் இரு தரப்பிற்கும் பரஸ்பரம் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுத்தரும் என்று நாம் நம்புகின்றோம்' என்றும் கொமர்ஷல் கிரெடிட் தலைவர் சிசில் பெரேரா குறிப்பிட்டார்.