
தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலும், வட பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் புதிய யுகத்துக்கு வலுச்சேர்த்திடும் வகையிலும், தனது பல்கலைக்கழக உறவுகள் செயற்திட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரு நாள் செயலமர்வை ஓகஸ்ட் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் 99X Technology ஏற்பாடு செய்திருந்தது.
2011ஆம் ஆண்டு இந்த செயற்திட்டத்தின் முதலாவது நடவடிக்கையை முன்னெடுத்திருந்த 99X டெக்னொலொஜி, இந்த ஆண்டின் செயலமர்வுக்கு 'வாழ்க்கை திறன் அபிவிருத்தி' என பெயரிட்டிருந்தது. யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த குழுவில் 15 அங்கத்தவர்கள் உள்ளடங்கியிருந்ததுடன், இதில் 99X Technology நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மனோ சேகரம் அவர்களும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த செயலமர்வுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பீடத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களிடமிருந்தும், விரிவுரையாளர்களிடமிருந்தும் சிறந்த வரவேற்பு காணப்பட்டது.
இந்த செயலமர்வு குறித்து 99X Technology நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'யாழ்ப்பாணத்தின் வளத்தை, இலங்கையின் அனைத்து சமூகத்துடனும் இணைக்கும் வகையில் இந்த செயலமர்வை முன்னெடுக்க முடிந்தமையையிட்டு பெரும்மகிழ்ச்சியடைகிறேன். அவர்களை வரையறைகள் இல்லாத வாய்ப்புகளுடனும், உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படும் சந்தர்ப்பங்களுடனும் இணைப்பதையிட்டு மகிழ்வடைகிறேன்.
யாழ்ப்பாணத்தில் உள ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் ஏற்படும் மாற்றத்தை கவனத்தில் கொள்ளும் போது, எதிர்காலத்தில் சிலிக்கன் வெலி பகுதிக்கு நிகரான பிரதேசமாக திகழக்கூடிய வாய்ப்புகள் காண்படுகிறது. அவர்களின் சுய வர்த்தக நாமங்களை தொழில்நுட்ப மற்றும் அலுவலக சார் திறன்களுடன் கட்டியெழுப்ப உதவிபுரிய நாம் தயாராக உள்ளோம்' என்றார்.
99X Technology நிறுவனத்தின் பணியாற்றுபவரும், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியுமான லக்சிகா தயாபரன் தனது கனிஷ்ட மாணவர்களுக்கு தனது நேர்த்தியான செயற்பாடு எவ்வாறு இந்த துறையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடிந்தது என்பது குறித்து ஊக்குவிப்பு சொற்பொழிவை நிகழ்த்தியிருந்தார்.
முதல் நாள் செயற்பாடுகள் நிறைவின் போது, 99X Technology நிறுவனத்தின் குழுவினருக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அணிக்கும் இடையில் சிநேகபூர்வமான கிரிக்கெட் போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த செயற்பாடு மறுநாள் செயலமர்வுக்கு அதிகளவு ஊக்கத்தை பங்குபற்றியவர்களுக்கு வழங்கியிருந்தது. இரண்டாம் நாள் செயற்பாடுகளில் குழு ஒன்றை கட்டியெழுப்பும் முறை மற்றும் வெற்றிகரமான பொருட்களை கட்டியெழுப்பும் செயன்முறை போன்றன ஆராயப்பட்டிருந்தன. மேலும், கற்கையை பூர்த்தி செய்த பின்னர், எவ்வாறு பரந்த தொழில்நிலையை தெரிவு செய்வது, பொறியியலாளரை போல சிந்திப்பது எவ்வாறு போன்ற சுவாரஸ்யமான விடயங்கள் பல ஆராயப்பட்டிருந்தன.
திணைக்களத்தின் தலைமை அதிகாரியான கலாநிதி. சார்ள்ஸ் இயுஜின் கருத்து தெரிவிக்கையில், குறித்த செயலமர்வு பெருமளவு ஊக்கமளிப்பதாகவும், அதிகளவு விடயங்களை மாணவர்களுக்கு சென்றடையச் செய்யும் வகையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 'இந்த செயற்திட்டம் மாணவர்களுக்கு அதிகம் உதவியாக அமைந்திருந்தது. அவர்களின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதற்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்திருந்தது' என்றார்.
வரையறைகளை கடந்து சிந்திப்பது எவ்வாறு மற்றும் எமது எல்லைகளுக்கு அப்பால் காணப்படும் உலகை எதிர்கொள்வது எவ்வாறு போன்ற விடயங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த செயலமர்வில் மாணவர்கள் தமது சுய நம்பிக்கையை விருத்தி செய்திருந்தனர் அத்துடன், அறிவைத் தேடி புதிய பாதையில் பயணிப்பதற்கான வழிமுறையையும் அறிந்து கொண்டனர். அத்துடன், அவர்கள் கொழும்புக்கான விஜயத்தை மேற்கொண்ட போது, 99X Technology அலுவலகத்தை பார்வையிடவும் தவறவில்லை.
