.jpg)
தனது இரண்டாம் நிலை சுட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகளின் நிலைவரங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையை கொழும்பு பங்குசந்தை Amba ஆய்வு நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது.
உள்நாட்டு மூலதன சந்தையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், இந்த புதிய உடன்படிக்கையில் Amba ஆய்வு நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளோம். இந்த ஆய்வுகள் நடுநிலையானதாக அமைந்திருக்கும். இந்த ஆய்வு முடிவுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேவைக்காக வழங்கப்படும் என கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேகா செல்லஹேவா தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பெறப்படும் தரவுகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கும் பட்டியலிடப்பட்ட கம்பனிகளுக்குமிடையிலான முரணான கருத்துக்கள் மற்றும் விபரங்கள் பரிமாறலை தவிர்த்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை மையமாக கொண்டியங்கும் Amba ஆய்வு நிறுவனம் கொழும்பு பங்குச்சந்தையில் இரண்டாம் நிலை பங்குச்சுட்டியான S&P SL 20 சுட்டியில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் செயற்திறன் குறித்து ஆராயும். சந்தை பெறுமதிக்கமைய உயர்வாக காணப்படும் 20 கம்பனிகள் இந்த சுட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வறிக்கை பிரதானமாக துறையின் மேலோட்டம், நிறுவனத்தின் மேலோட்டம் போன்ற விபரங்களை வாசிப்பவர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்திருக்குமென Amba ஆய்வு நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி சானக்கிய திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி போன்ற நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகள் இந்த உடன்படிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு கொழும்பு பங்குச்சந்தையின் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதான சுட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அந்த நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் துறை குறித்த மேலோட்டங்களை ஆராய்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் சிலவற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாக அமைந்துள்ளதாக சில முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் பங்கு கொள்வனவில் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவு செல்வாக்கை செலுத்தும் மற்றுமொரு காரணியாக இந்த ஆய்வு அறிக்கைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த அறிக்கைகள் தவறான வழியில் முதலீட்டாளர்களை வழிநடத்தும் காரணமாக முதலீட்டாளர்கள் பெருமளவு நட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும், குறித்த நிறுவனம் வெளியிடும் ஆய்வறிக்கைகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறிக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.