2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'லங்காபெக் 2014' கண்காட்சி

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கண்காட்சி நிலையத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 18 முதல் 20ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ள 'லங்காபெக் 2014' (Lankapak 2014) கண்காட்சி தொடர்பில், இலங்கையின் பொதியிடல் துறையை பிரதிநிதித்துவம் செய்யும் முதன்மை நிறுவனமாக திகழ்கின்ற இலங்கை பொதியிடல் நிறுவகமும்; (SLIP), MP இவன்ட்ஸ் லங்கா (MP Events Lanka) நிறுவனமும் இணைந்து அறிவித்துள்ளன. 
 
இலங்கை பொதியிடல் நிறுவகம் மற்றும் அதனது தொழில்நுட்பப் பிரிவான பொதியிடல் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற 'லங்காபெக் 2014' கண்காட்சியானது இலங்கையின் பொதியிடல் துறையில் மறைந்திருக்கின்ற பரந்தளவான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகின்ற அதேவேளை, வளர்ச்சியடைந்து செல்கின்ற சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு புது வகையான சர்வதேச உற்பத்திகளையும் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வாக அமையும். 
 
வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சு அத்துடன், உலகளாவிய மற்றும் பிராந்திய பொதியிடல் நிறுவனங்களான – உலக பொதியிடல் அமைப்பு மற்றும் ஆசிய பொதியிடல் சம்மேளனம் ஆகிய இரண்டினதும் ஆதரவை இக் கண்காட்சி பெற்றுக் கொண்டுள்ளது. 'லங்காபெக் 2014' கண்காட்சிக்கு CMC என்ஜினியரிங் (பிளாட்டினம் அனுசரணையாளர்) மற்றும் யூரோஆசியா பெக்கேஜிங் (தங்க அனுசரணையாளர்) போன்ற நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன. அதேவேளை பிரீமியம் பெக்கேஜிங் சொலியுசன்ஸ், JDC கிராஃபிக் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் 'வெள்ளி' அனுசரணையாளர்களாக செயற்படுவதுடன், டியுராபெக் நிறுவனமானது 'வெண்கல' அனுசரணையை வழங்குகின்றது.
 
ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் இலங்கை பொதியிடல் நிறுவகத்தின் முன்னாள் தலைவரும் அதேநேரம் பொதியிடல் அபிவிருத்தி நிலையத்தின் தற்போதைய தலைவராக கடமையாற்றுபவருமான திரு. தர்மதிலக்க ரட்ணாயக்க கூறுகையில், 'வரவேற்கும் பண்புடைய வாடிக்கையாளர் தளத்திற்கு அதிமுன்னேற்றகரமான பொதியிடல் உபகரணங்கள் மற்றும் புதிய உற்பத்திகளின் வழங்குனர்கள் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்காக அவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு கேந்திர மையமாக கொழும்பு நகர் எப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இறக்குமதி செய்யப்படுகின்ற மூலப் பொருட்கள் மற்றும் பொதியிடல் உபகரணங்களில் முற்றுமுழுதாக தங்கியிருக்கும் நாடு என்ற வகையில் இலங்கையானது, கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அதிகமான ஏற்றுமதிப் பொருட்களில் உயர்தரமிக்க பொதியிடல் வடிவமைப்பு மற்றும் செயன்முறைகளை மேற்கொண்டதன் ஊடாக - தனது பொதியிடல்சார் மாற்றியமைத்தல், அதன்மூலம் ஏற்றுமதி உற்பத்திகள் போன்றவற்றுக்கு மேலும் பெறுமதியை சேர்க்கும் கலையில் பூரணத்துவமான ஆற்றலைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது' என்று தெரிவித்தார்.  
 
இலங்கை பொதியிடல் நிறுவகத்தின் தலைவரான திரு டட்லி தம்பிநாயகம் கூறுகையில், 'அநேகமாக தென்னாசியாவிலேயே பொதியிடல் துறையில் மிகவும் பழமைவாய்ந்த அமைப்பாக திகழ்கின்ற SLIP ஆனது, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மிகவும் மனம் வருந்தத்தக்க ஒரு நிலையில் காணப்பட்ட இலங்கையின் பொதியிடல் துறையின் தராதரத்தை இன்று காணப்படுகின்ற உயர் மட்டத்திலான போட்டிகரமிக்க நிலைக்கு மேம்பாடடையச் செய்த ஒரு பெருமைமிக்க வரலாற்றுக்கு சொந்தக்காரராக இருக்கின்றது. உள்நாட்டு பொதியிடல்சார் அபிவிருத்திகள் மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டும் ஊக்குவிப்புப் பிரசார கண்காட்சிகள், பொதியிடல் துறையில் அங்கம் வகிக்கின்ற பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சியில் ஆசிய பொதியிடல் சம்மேளனத்தின் அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த பொதியிடல் உள்ளீடுகள் மற்றும் இயந்திர சாதன விநியோகஸ்தர்களின் செயற்றிறன்மிக்க பங்குபற்றுதலை நாம் எதிர்பார்த்துள்ளோம். குறிப்பாக இலங்கையின் பொதியிடல் துறைக்கு இவ்வாறான பொருட்களை பெருமளவுக்கு விநியோகித்துவரும்  இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மீது இவ்வகையான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றோம். இவ்வருடம் நடைபெறவுள்ள 'லங்காபெக் 2014' கண்காட்சியின் வெற்றி குறித்து நாம் சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார். 
 
இலங்கை பொதியிடல் நிறுவகம் 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1980களின் முற்பகுதியில் இருந்து கொழும்பில் நடாத்திவரும் பொதியிடல் கண்காட்சிகளின் ஊடாக, இந்நாட்டின் பொதியிடல் துறைசார் அபிவிருத்திகளை வெளியுலகுக்கு காட்சிப்படுத்துகின்ற உரிமையை நடைமுறையில் இந்த நிறுவகமே அனுபவித்து வருகின்றது. ஆசிய பொதியிடல் சம்மேளனத்தின் செயலாற்றல்மிக்க உறுப்பினரான SLIP ஆனது, அங்கத்துவ நாடுகளான சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மூலப் பொருள் மற்றும் இயந்திர உற்பத்தியாளர்கள் 'லங்காபெக் 2014' கண்காட்சியில் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்கு ஊக்கமளிக்குமாறு மேற்படி நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
PICO நிறுவனத்தின் ஒரு உப நிறுவனமான MP இவன்ட்ஸ் லங்கா, இலங்கையின் மிகவும் பழமைவாய்ந்ததும் அனுபவம் பெற்றதுமான தொழில்சார் கண்காட்சி ஏற்பாட்டாளராக திகழ்கின்றது. பரந்தளவிலானதும் மிகப் பல்வகைப்பட்டதுமான தொடரிலமைந்த பல்வேறு கண்காட்சிகளை இந் நிறுவனம் ஏற்பாடுசெய்து நடாத்தியிருக்கின்றது. 18 வருட காலத்திற்கு மேலான மற்றும் 250 கண்காட்சிகளுக்கும் அதிகமான அனுபவத்தை பெற்றுள்ள எம்பி இவன்ட்ஸ் லங்கா நிறுவனமானது வெற்றிகரமாக கண்காட்சிகளை நடாத்துவதற்கு அவசியமான அறிவு, நிபுணத்துவம், திறன்கள் மற்றும் தொழில்வாண்மைத்துவம் ஆகியவற்றை தம்வசம் கொண்டியங்குகின்றது. எம்பி இவன்ட்ஸ் லங்கா நிறுவனம் ஒரு சான்றளிக்கபட்ட  தொழில்சார் கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. அதுமட்டுன்றி சுற்றுலாத்துறை அமைச்சின் ஆதரவின் கீழியங்கும் இலங்கை மாநாட்டு பணியகத்தினால் (SLCB) முன்னின்று நடாத்தப்படும் MICE ஊக்குவிப்புத் திட்டத்தில் செயற்றிறனுள்ள ஒரு அங்கத்தவராகவும் காணப்படுகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .