2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கலாபொல 2015' கண்காட்சி

A.P.Mathan   / 2015 மார்ச் 26 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் வருடாந்த திறந்தவெளி கண்காட்சியான 22ஆவது காலபொல நிகழ்வு 2015 ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்றது.  292 கலைஞர்களை ஒரே தளமேடைக்கு அழைத்து வந்திருந்த இக் கண்காட்சியானது உயிரோட்டத்தோடு வர்ணமயமாக காட்சியளித்த நெலும்பொக்குண மாவத்தைக்கு 22,000 இற்கும் அதிகமான பார்வையாளர்களை ஒன்றுதிரளச் செய்திருந்தது. 

இக் கண்காட்சியின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தனிகர் மேன்மைதங்கிய வை.கே. சின்ஹா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அதேவேளை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின்ன பிரதித் தலைவர் திரு. அஜித் குணவர்தன, ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைவர் மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் பெருமளவிலான நலன்விரும்பிகள் மற்றும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தோரும் இதில் கலந்து கொண்டனர். 

கலாபொல கண்காட்சியின் 22ஆவது ஆண்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தனிகர் மேன்மைதங்கிய வை.கே. சின்ஹா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், 'நாடு முழுவதிலும் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க உதவியளிக்கும் ஒரு வீதியோர கண்காட்சி என்ற வகையில் கலாபொல ஆனது உலகின் இப் பிராந்தியத்தில் மிக முக்கியத்துவமிக்க அந்தஸ்தை அடைந்துள்ளது' என்றார். நவீன ஓவிக் கலைஞர்கள் முன்வந்து தாம் தீட்டிய ஓவியங்களை காட்சிப்படுத்தியதை காணும்போது மனமகிழ்ச்சி அடைந்ததாகவும் மேன்மைதங்கிய வை.கே. சின்ஹா குறிப்பிட்டார். 'ஜோர்ஜ் கீற் மன்றம் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் ஆகியவை பரஸ்பர ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யும் மிகவுன்னதமான ஒரு முன்னெடுப்பாக இது திகழ்கின்றது என்று நான் நினைக்கின்றேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார். 

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைவரான திரு. செட்றிக் டி சில்வா கூறுகையில், 'கலைக்கு,  அதுவும் குறிப்பாக எதிர்பார்ப்புள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது மன்றத்தின் அடிப்படை இலக்காகும். பாராட்டு தெரிவிப்பதற்கான மற்றும் கலைப் படைப்புக்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு களத்தை கலைஞர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் இவ்வருட கலாபொல நிகழ்வும் வழங்கியிருந்தது. இந்த 13 மணித்தியால நிகழ்வானது விற்பனையின் மூலம் ரூபா 13 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை பெற்றுத்தந்தது. கொள்வனவு செய்யும் சாத்தியமுள்ள பார்வையாளர்களுக்கான விற்பனை நீங்கலாகவே இத் தொகை மதிப்பிடப்பட்டது. இலங்கை கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் விடயத்தில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புக்காக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் மன்றம் ஆகியவற்றுக்கு நாம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்' என்றார். 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) பிரிவு தலைமை அதிகாரியான செல்வி. நதீஜா தம்பையா கூறுகையில், 'இம்முறை கலாபொல கண்காட்சியானது  தொடர்ச்சியாக 22ஆவது வருடமாக இடம்பெறுவதுடன் ஜோன் கீல்ஸ் குழுமம் ஏக அனுசரணையாளராகவும் ஏற்பாட்டாளராகவும் செயற்படுகின்றது. இவ்வருடம் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு பார்வையாளர்கள் வருகைதந்தது மட்டுமன்றி முன்னரை விட அதிகமான விற்பனையும் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கை ஓவியத்தின் ஆழ – அகலங்களை காண்பதற்காக திஸ்ஸமஹாராம போன்ற தூர இடங்களிலுள்ள சித்திரப்பாட ஆசிரியர்கள் தமது மாணவர்களை அழைத்து வந்திருந்தமை எமக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இலங்கைக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் கொண்டிருந்த வேட்கையும் வெளிப்படுத்திய பிரதிபலிப்பும் - இலங்கையின் கலை கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக நாம் வழங்கி வருகின்ற ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக இந்த செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான உந்துசக்தியை எமக்கு அளித்துள்ளது' என்று தெரிவித்தார்.  

கலாபொல 2015 கண்காட்சியில் 'சிறுவர்களின் ஓவிய பிரிவு' ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 98 சிறுவர்கள் தமது ஓவியப் படைப்புக்களை காட்சிப்படுத்தினர். இவர்களுக்கு சான்றிதழ்களும் எலிபண்ட் ஹவுஸ் நிறுவனத்தின் ஐஸ்கிறீம் வெகுமதிகள் மற்றும் சகுரா முகவர் நிறுவனத்தால் அனுசரணை அளிக்கப்பட்ட கலர் பொக்ஸ்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 'மூளை முடக்குவாத குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான 'கனவு இல்லம்' மாணவர்களும் இவ்வருட சிறுவர் ஓவியப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தமை மனநிறைவு அளிப்பதாகும். 

அந்தி மாலைப்பொழுது கொழும்பு நகரை சூழ்ந்து கொள்கின்ற வேளையில், அங்கு இடம்பெற்ற இரவுநேர களிப்பூட்டல் நிகழ்ச்சிகளுள் புகழ்பெற்ற ரவிபந்து வித்தியாபதி ட்ரம் இசைக்குழு மற்றும் திரிலோகவின் - இலங்கை கிராமிய இசை, இந்தியன் ராகம், ஜாஸ் மற்றும் ரொக் ஆகிய இசை வடிவங்களின் கலவையாக வழங்கிய புதுமையான இசை நிகழ்ச்சி முக்கிய இடத்தைப் பிடித்தது.

தன்னார்வ பணியாளர்களாக சேவையாற்றிய ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பங்களிப்பு இன்றி கலாபொல கண்காட்சியானது வெற்றிகரமானதாக அமைந்திருக்காது. இவர்களிடம் பல்வேறு பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அன்றைய நாள் முழுவதும் 107 தன்னார்வ ஊழியர்கள் அணிகளாக பணியாற்றினார்;கள்.

கலாபொல கண்காட்சியில் கலந்துகொண்ட கலைஞர்கள், இலங்கையின் முதலாவது கூட்டாண்மை டிஜிட்டல் ஆர்ட் கலரியாக திகழும் www.srilankanartgallery.com என்ற இணையத்தளத்தில் தம்மை பதிவு செய்து கொள்வதற்கும் தன்னார்வ பணியாளர்கள் உதவி புரிந்தனர். இந்த இணையத்தளமானது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான ஜோன் கீல்ஸ் மன்றத்தினால் (JKF) வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, நடாத்தப்படுகின்றது. கலாபொல முடிவடைந்த பிற்பாடும், வருடத்தின் ஏனைய காலப்பகுதியிலும் இலங்கை கலைஞர்கள் தம்முடைய கலைப் படைப்புகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் வசதியளிக்கும் அடிப்படையிலேயே ஜோன் கீல்ஸ் மன்றம் இந்த இணையத்தளத்தை இயக்குகின்றது. 

கலாபொல கண்காட்சியில் முதன்முதலாக தன்னார்வ பணியாளராக கலந்துகொண்ட சவிண்டி லூகஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'கலாபொல கண்காட்சியில் தன்னார்வ சேவையாற்றுவது ஒரு உளத் திருப்தி தரும் அனுபவமாகும். அன்றைய நாள் முழுவதும் வாழ்வின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்களை சந்திப்பதற்கு இது எனக்கு வாய்ப்பளித்தது. அது எனக்கு கற்றுக்கொள்ளும் அனுபவமாகவும் அமைந்தது. எனது கருத்துப்படி, இது உண்மையிலேயே தூய்மையான ஒரு கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முயற்சியாகும். கூட்டாண்மை பிரஜைவுரிமையின் உண்மையான சாரத்தை உள்ளடக்கியதான இந்த முன்னெடுப்பில் பங்குபற்றியமை ஒரு சிறப்புரிமை என கருதுகின்றேன்' என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X