
இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்டுவர்ட் செப்மன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றதுடன் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி கோஷி மாத்தாய் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் புதிய தலைவர் ஸ்டுவர்ட் செப்மன், சுகாதாரத் துறையை சிறப்பாக முன்னெடுத்து செல்கின்ற நாடுகள் வரிசையில் இலங்கையும் அடங்குகின்றது. இலங்கை மக்களின் சுகாதார நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க எம்மாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவோம். தரமான மருந்துப் பொருட்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கம் சிறப்பானது. மருந்துப் பொருள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களை உள்ளடக்கிய சம்மேளனம் என்ற வகையில் நாமும் அரசாங்கத்துடன் இணைந்து அதனை சிறப்பாக முன்னெடுப்போம். அத்துடன் சர்வதேச தரத்துக்கு அமைய செயற்படவும் நாம் தயாராக உள்ளோம். நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்த எமது சங்கத்திலுள்ள அனைத்து உறுப்புரிமை பெற்றவர்களும் சிறப்பாக பணியாற்றுவார்கள்' என குறிப்பிட்டார்.
அரசாங்கமும் சுகாதார அமைச்சும் கடந்த காலகட்டத்தில் மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்துடன் இணைந்து செயற்பட்டதை போன்று தொடர்ச்சியாக வேண்டும் என கேட்டுக்கொண்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் விஷ் கோவிந்தசாமி தான் தலைவராக இருந்தபோது ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
.jpg)