
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் சரிவடைந்ததை தொடர்ந்து, இந்த நிலை தொடர்ந்தும் நிலவும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மதிப்பிறக்கம் இலங்கையில் மட்டும் நிலவும் ஒரு விடயமல்ல எனவும், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பலம் பொருந்திய பொருளாதார சூழ்நிலைகள் நிலவும் நாடுகளிலும் சம காலத்தில் காணப்படும் விடயமாக அமைந்துள்ளதென அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மதிப்பிறக்கத்துக்கு காரணம், அமெரிக்காவின் வட்டி வீதங்கள் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளமையாகும் என அறிவிக்கப்படுகிறது. இந்த மதிப்பிறக்கத்தை தவிர்க்கக்கூடிய வகையில் இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று பெறுமதிகளில் தலையீட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், நீண்ட கால நோக்கில் டொலர்களில் கடன் பெற்றுக் கொள்வது மற்றும் அசையாச் சொத்துக்களில் முதலீடுகளை மேற்கொள்வது போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் ரூபாவின் பெறுமதியை நிலைபெறச் செய்ய முடியும் என குறித்த பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
உலக பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளும் போது, அமெரிக்காவில் நிலவிய பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியின் போது, நாட்டை விட்டு வெளியே சென்ற டொலர்கள் மீண்டும் அமெரிக்காவை நோக்கி உள்வந்த வண்ணமுள்ளன. இதன் காரணமாக, இலங்கை நாணயம் மட்டுமல்ல, ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதிகளும் சரிவடைந்த நிலையில் தான் காணப்படுகின்றது என குறிப்பிட்டிருந்தனர்.