.jpg)
-ச.சேகர்
கொழும்பு பங்குச்சந்தை கடந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த பெபேறுகளை பதிவு செய்திருந்தது. குறிப்பிடத்தக்க அம்சங்களாக, டச்வுட் இன்வெஸ்மன்ட் பங்குகளை நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா கொள்வனவு செய்திருந்தமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வைப்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தமை போன்ற விடயங்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றுக்கு மேலதிகமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் பங்குகளை கொள்வனவு செய்வதில் கடந்த வாரம் பெருமளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,808.62 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3210.30 ஆகவும் அமைந்திருந்தன.
செப்டெம்பர் 23ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,214,899,733 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 39,536 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 38,065 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,471 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கணிசமான இலாபகரமான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை தொடர்ந்து, சந்தை சீராக்கத்தை அவதானிக்க முடிந்தது. கார்சன் கம்பர்பெட்ச், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் விலைகள் இழப்புகளை பதிவு செய்திருந்தன. செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகள் மொத்த விற்பனைகளை பதிவு செய்திருந்தன. டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ், ப்ளு டயமன்ட்ஸ், கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட் மற்றும் நேஷன் லங்கா ஃபினான்ஸ் போன்றவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகளவில் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை
ப்ளுசிப்களின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட போதிலும், சந்தை நேர் பெறுமதியில் கொடுக்கல் வாங்கல்களை நிறைவு செய்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி 817 மில்லியனை எய்தியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி போன்றவற்றின் பங்குகள் மொத்த அளவில் விற்பனையாகியிருந்தன. இவை மொத்தப்புரள்வு பெறுமதியின் 58% ஐ பதிவு செய்திருந்தன. வெளிநாட்டு ஈடுபாடும் அதிகளவில் காணப்பட்டது. டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ், ப்ளுடயமன்ட்ஸ், பான் ஏசியன் பவர் மற்றும் சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் ஃபினான்ஸ் போன்ற பங்குகள் மீது எதிர்பார்ப்புடனான கொள்வனவு காணப்பட்டது.
புதன்கிழமை
ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் புக்கிட் தாரா போன்ற பங்குகள் மீது விலைச்சரிவு பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அதிகளவான கொடுக்கல் வாங்கல்கள் சந்தையில் பதிவாகியிருந்த போதிலும், மறை பெறுமதியிலேயே சந்தை நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது வெளிநாட்டு ஆர்வம் அதிகளவில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ், டோக்கியோ சீமெந்து மற்றும் டீசல் அன்ட் மோட்டர் என்ஜினியரிங் ஆகியன பங்குகள் உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாட்டை அவதானிக்க முடிந்தது. டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ், சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் பீசி ஹவுஸ் பங்குகள் மீதான எதிர்பார்ப்புடன் கொள்வனவு தொடர்ந்திருந்தது.
வியாழக்கிழமை
வங்கியியல் சார்ந்த பங்குகளில் அதிகளவு ஈடுபாடு அவதானிக்கப்பட்டது. சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகள் மொத்த வியாபாரத்துக்குள்ளாகியிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி 920 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், இரு சுட்டிகளும் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஐஓசி போன்ற நிறுவனங்கள சார் பங்குகளிலும் ஈடுபாடு காணப்பட்டது. டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ், சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் ஃபினான்ஸ் போன்ற பங்குகள் மீது சிறியளவான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை
பரந்தளவில் பங்குகள் உயர்வான பெறுமதிகளை எய்தியிருந்த போதிலும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கார்சன் கம்பர்பெட்ச் மற்றும் நெஸ்லே லங்கா போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்ததன் காரணமாக சந்தையின் பிரதான சுட்டிகள் கலப்பு பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி வாரத்தின் குறைந்த பெறுமதியை பதிவு செய்திருந்தது. பிரமால் க்ளாஸ் மற்றும் றிச்சர்ட் பீரிஸ் கம்பனி ஆகிய பங்குகளில் ஆர்வம் காணப்பட்டது. அமானா டகாஃபுல், ஏசியா அசெட் ஃபினான்ஸ், பீசி ஹவுஸ் மற்றும் எஸ்எம்பி லீசிங் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகளவில் காணப்பட்டது. அ.ப.வி.சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண் ஆகியன இந்த வாரம் 0.45% மற்றும் 0.13% சரிவை பதிவு செய்திருந்தன.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் டச்வுட், சிஐஎஃவ்எல், ஏசியா அசெட், எஸ் எம் பி லீசிங் (சாதாரண) மற்றும் சிட்ரஸ் லெய்ஷர்(உரிமைப் பங்குகள்) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
ஜிஎஸ் ஃபினான்ஸ், ஒஃபிஸ் எக்யுப்மன்ட், ரேணுகா ஷோ(சாதாரண), அபான்ஸ் மற்றும் பீசி பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 46,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.64 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 214.98 ஆக காணப்பட்டிருந்தது.