
இலங்கையின் வாகன லீசிங் சந்தையானது கடந்த சில வருடங்களாகவே சவால்களை எதிர்நோக்கி வருவதாக முன்னணி சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு பிரதான காரணியாக தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்படும் வாகன இறக்குமதி தீர்வுகள் மற்றும் வரி விதிப்புகள் போன்றன காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாக பல விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள வாகன லீசிங் சேவை வழங்குநர்கள் இந்த சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளின் காரணமாக பெருமளவு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வரிகளில் குறைப்பு ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து, குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் பெருமளவானோர், வாகனங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் லீசிங் பெற்றுக் கொள்வதிலும் பெருமளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனாலும் வரிவிதிப்பு அதிகரிப்பட்டதை தொடர்ந்து, வாகனங்களின் கேள்வி குறைவடையத் தொடங்கியதுடன், லீசிங் துறையும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் துறையில் காணப்படும் போட்டிகரத்தன்மையும் ஒரு காரணியாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியிருந்த பிரத்தியேக செவ்வி ஒன்றில் பீபிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் கோவிந்தசாமி ரமணன் இந்த தகவல்களை தெரிவித்திருந்தார்.