2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்துக்களின்றி செயற்படும் லபார்ஜ் மஹாவலி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த இரண்டு வருடங்களாக தமது தொழிற்சாலையில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என்பதை நினைவுகூர்ந்து லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம் அண்மையில் கிரிக்கெட் போட்டியொன்றை உறுகொடவத்தை உமகிலிய மைதானத்தில் நடத்தியது.  
 
உலகின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தியாளரான லபார்ஜ் நிறுவனம் சர்வதேச தரத்துக்கு அமைய தமது உற்பத்திகளை மேற்கொள்கின்றதுடன் தமது தொழில் நடவடிக்கை இடம்பெறும் சூழலை மிக பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். 
 
இலங்கையில் லபார்ஜ் தொழிற்சாலை கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ளதுடன் இது பிரான்ஸில் அமைந்துள்ள தொழிற்சாலையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை நிறுவனம் உரிய முறையில் முன்னெடுத்து பின்பற்றியதால் கடந்த இரு ஆண்டுகளாக தொழிற்சாலையில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை. லபார்ஜ் நிறுவனம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 2005ஆம் ஆண்டு முதல் முன்னுரிமை வழங்குகின்றது. 2
 
2007ஆம் ஆண்டு முதல் சீமெந்து வியாபார நடவடிக்;கையை மாத்திரமன்றி சுகாதாரம் மற்றும்  பாதுகாப்பு ஆகிய துறைகள் தொடர்பாகவும் தமது கவனத்தை செலுத்தி வருகின்றது. தொழிலுக்கு வீடுகளிலிருந்து வருபவர்கள் மீண்டும் அதே உடல் ஆரோக்கியத்துடன் வீடு செல்ல வேண்டும் என்பதே நிறுவனத்தின் குறிக்கோளாகும். ஏதாவது விபத்து இடம்பெற்றால் அது தொடர்பில் 64 நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு அத்தகைய அனர்த்தம் எதிர்காலத்தில் மீள ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையும் விசேட அம்சமாகும்.
 
பாதுகாப்பு தரத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றதுடன் தொழிற்சாலையிலுள்ள முகாமையாளர்கள் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதையும் பேணுவதையும் முன்னிறுத்தி தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  
 
அத்துடன் தொழிற்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றனர். தொழிற்சாலை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்றிணைந்து பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடுவதுடன் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைககளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் முன்எச்சரிக்கையுடன் தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். தொழிற்சாலையில் வழமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் வெளி ஊழியர்கள் கூட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
அத்துடன் சாரதிகளுக்கும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வாகனத்தை செலுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக அறிவுறுத்தப்படுவதுடன் அவர்களும் பல்வேறு பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர். வாகனங்களை பாதுகாப்பாக செலுத்துவது தொடர்பில் அவர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 
 
தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுவதுடன் வாரமொன்றுக்கு இரு தடவை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு  அவர்களுக்கு தேவையான இலவச ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
லபார்ஜ் நிறுவனத்தில் பணியாற்றும் சாரதிகள் மட்டுமல்ல அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன்போது ஊழியர்களின் பிள்ளைகளுக்கான சித்திரக் கண்காட்சி போட்டியும் நடைபெறும்.
 
இதுதவிர சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு தொடர்பாக நிறுவனம் பல்வேறு தகவல்களை வழங்கி அவர்களையும் ஊக்குவிக்கின்றது. அதனடிப்படையில் பாடசாலைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக தெமட்டகொடவிலுள்ள பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.
 
'பாதுகாப்பு மற்றும் சுகாதார கலாசாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த நாம் செயற்படுகின்றோம். லபார்ஜ் நிறுவனத்தில் மாத்திரமல்ல சீமெந்து தொழிற்சாலைகளில் மாற்றங்கள் ஏற்படல் வேண்டும். இதற்காக எமது பங்குதாரர்களின் பங்களிப்பும் அவசியம்' என லபார்ஜ் நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகாமையாளர் பி.எம்.ஜுல்கர் நைம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .