.jpg)
-ச.சேகர்
கடந்த வாரம் முதல் மூன்று தினங்களில் தொடர்ச்சியாக சரிவை எதிர்நோக்கியிருந்த கொழும்பு பங்குச்சந்தை, வியாழக்கிழமை மீண்டும் உயர்வான பெறுமதியை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் உரிமை பங்குகள் போன்றன இந்த உயர்வான பெறுமதியை பதிவு செய்வதற்கு காரணமாக அமைந்திருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,948.75 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3280.48 ஆகவும் அமைந்திருந்தன.
ஒக்டோபர் 21ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,508,373,529 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 31,667 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 30,071 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,596 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் விலையில் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பங்குச்சந்தையின் பிரதான சுட்டிகள் சரிவடைந்திருந்தன. ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் கொள்வனவில் வெளிநாட்டவர் ஆர்வம் செலுத்தியிருந்தனர். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உரிமை பங்குகள் விற்பனை சந்தைபுரள்வு பெறுமதியில் செல்வாக்கு செலுத்தியிருந்தது. மேலும் சம்பத் வங்கி, எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகள் மீதான நடவடிக்கைகள் அவதானிக்க முடிந்தது.
செவ்வாய்க்கிழமை
ப்ளுசிப் பங்குகள் மீதான நாட்டம் மொத்தப்புரள்வு பெறுமதியை அதிகளவு உயர்வடையச் செய்திருந்தன. குறிப்பாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் வங்கி பங்குகளான கொமர்ஷல் வங்கி மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி போன்றன இவ்வாறு அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. யூனியன் வங்கி, டோக்கியோ சீமெந்து மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் போன்றன நிறுவனங்களும் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குகளை கொள்வனவு செய்திருந்தனர். குறிப்பாக டிஸ்டிலரிஸ் பங்குகளை கொள்வனவு செய்திருந்தனர். டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் ஃப்ரீ லங்கா கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் போன்றன பங்குகள் மீதான செயற்பாடுகளும் குறைவாக காணப்பட்டன.
புதன்கிழமை
கார்சன் கம்பர்பெட்ச் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் போன்ற பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, சந்தை நடவடிக்கைகள் தொடர்ச்சியான மூன்றாவது நாளாக சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா பங்குகள் கொள்வனவில் வெளிநாட்டவர்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர், யூனியன் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (உரிமை பங்குகள்) பங்குகளை வெளிநாட்டவர்கள் விற்பனை செய்திருந்தனர்.
வியாழக்கிழமை
தொடர்ச்சியான மூன்று நாட்களாக சரிவுகளை பதிவு செய்திருந்த பங்குச்சந்தையில் முன்னேற்றமான நிலை காணப்பட்டது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் கொள்வனவில் அதிகளவு நாட்டம் காணப்பட்டமை மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உரிமை பங்குகள் கொள்வனவும் அதிகரித்திருந்தமை போன்ற காரணங்களால் சந்தை உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது, இதேவேளை யூனியன் வங்கி பங்குகள் மீதும் அதிகளவு ஈடுபாடு காணப்பட்டமையால் மொத்தப்புரள்வு பெறுமதி அரை பில்லியன் பெறுமதியை விட உயர்வடைய ஏதுவாக அமைந்திருந்தது.
வெள்ளிக்கிழமை
இந்த வார பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. குறிப்பாக கார்சன் கம்பர்பட்ச் பங்குகள் உயர்வான பெறுமதியை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் புக்கிட் தாரா பங்குகள் நேர்பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. தேசிய அபிவிருத்தி வங்கியின் பங்குகள் மொத்தமாக விற்பனையாகியிருந்தன. இது சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதி 1.5 பில்லியன் பெறுமதியை பதிவு செய்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. யூனியன் வங்கியின் பங்குகள் மீது அதிகளவு கவனம் காணப்பட்ட போதிலும், வெளிநாட்டவர்கள் குறைந்தளவு ஈடுபாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் செரன்டிப் என்ஜி. கோர்ப்., எஸ்.எம்.பி.லீசிங் (சாதாரண), எஸ்.எம்.பி.லீசிங், ஜிஎஸ் ஃபினான்ஸ் மற்றும் லங்கா செரமிக் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
மொரிசன்ஸ் (சாதாரண), டச்வுட், என்வி றிசோர்சஸ் (உரிமை), தப்ரோபேன் மற்றும் லங்கா லெதர்(உரிமை) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,600 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,800 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.21 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 214.76 ஆக காணப்பட்டிருந்தது.