.jpg)
இலங்கையின் முதன்மையான மலர் விற்பனையாளரும் மலர் அலங்கார நிறுவனமுமாக திகழும் லஸ்ஸன ஃபுளோரா ஆனது, தாமரைத் தடாகம் கலையரங்கில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் மாபெரும் ஆரம்ப நிகழ்வு மற்றும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் (CHOGM) இணைந்த மேலும் பல நிகழ்வுகளில் அனைத்துவித மலர்சார் ஏற்பாடுகள் மற்றும் அலங்கரிப்புக்களையும் கையாள்வதற்கான நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தனிச் சிறப்புமிக்க கௌரவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. அவ்வாறான ஏனைய நிகழ்வுகளுள் - ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாடு, பத்தரமுல்லை 'ஜன கலா கேந்திர' நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு போன்றவை உள்ளடங்கும்.
வெளிப்படையாகவே மிகவும் புளகாங்கிதம் அடைந்தவராகக் காணப்பட்ட லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் தலைவர் கலநிதி லசந்த மாளவிகே கருத்துத் தெரிவிக்கையில், 'இவை அனைத்துமே தனிதனித்தனி சுயாதீனமான நிகழ்வுகள் என்றாலும் பொதுநலவாயம் என்ற அடிப்படை மெய்ப்பொருளினை குறித்துக்காட்டுவதனால் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த நிகழ்வுகளாகும். எனவேதான் நாம், இந்த சர்வதேச நிகழ்வுக்கு வசீகரத்தை அளிப்பதற்காக ஒருவித மேலைத்தேய வாசனையுடன் இரண்டறக் கலந்த ஆசியாவின் வசீகரம் மற்றும் மேன்மையான தோற்றம் என்பவற்றை கொண்டு வந்திருந்தோம்' என்றார்.
'பொதுக் கருத்துள்ள வடிவமைப்பு மற்றும் தாமரைத் தடாகம் கலையகத்தின் தொனிப்பொருள் ஆகியவற்றை பேணும் வகையில், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற தாமரைகள், நீர் அல்லி மலர்கள், ஓர்கிட் மற்றும் வேறுபட்ட மாதிரிகளிலான ஹெலிகோனியா மலர்கள் போன்றவற்றை மாபெரும் ஆரம்ப நிகழ்வுக்கான அலங்காரத்திற்காக நாம் அபரிமிதமாக பயன்படுத்தினோம். இதற்கான பெட்டகங்கள் களி மண்ணினால் செய்யப்பட்டதுடன் தாங்கிகள் கறுவா பட்டைகளால் செய்யப்பட்டிருந்தன. உலகத்தின் மொத்த கறுவா தேவையின் 95% பங்கினை இலங்கை நிவர்த்தி செய்கின்றமையால் இந்நிகழ்வில் கறுவா பட்டைகளை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நினைத்தோம். இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் காத்திருப்பு அறையின் தூண்கள் மற்றும் நுழைவாயில்கள் என்பன 'அரச மகிமை' உணர்வை உட்சேர்க்கும் விதத்தில் கவர்ச்சிகரமான ஓர்க்கிட் மலர்களால் அழகுபடுத்தப்பட்டது. அதேபோன்று தாமரைத் தடாகம் கலையரங்கிலுள்ள அதிக எண்ணிக்கையிலான வரவேற்புக் கூடங்கள், காத்திருப்பு அறைகள் மற்றும் நடைபாதைகள் போன்றனவும் புதுமையான மலர் வடிவமைப்புக்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன' என்றும் கலாநிதி மாளவிகே தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து சிறப்பித்த பொதுநலவாய வர்த்தக பேரவையின் இரவுணவு நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மலர் ஏற்பாடுகள் செயற்கை நுட்பம் மற்றும் நேர்த்தி என்பவற்றுடன் உண்மையிலேயே இவ்வாறானதொரு நிகழ்வுக்கு மிகவும் ஏற்புடையதாக காணப்பட்டன. உண்மையாகவே இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அதிகமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இவ் விருந்துபசார கொண்டாட்ட நிகழ்வை பாராட்டினர். மேலும் மனங்கவர் மலர் அலங்காரத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்த சாந்தமான சூழ்நிலையானது, ஒட்டுமொத்த நிகழ்வுக்கும் மேலதிக பரிமாணத்தை வழங்கியது என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபடுவதாக ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பொதுநலவாய இளைஞர் மாநாட்டிற்கான மலர் அலங்காரங்கள் காணப்பட்டன. எதிர்பார்க்கை மற்றும் இளமை உணர்ச்சிபொங்கிய மனநிலை இங்கு நிலவியது. லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது, உயர் தொழில்நுட்ப வசதியுடைய உறையவைக்கும் வசதியுடனான ட்ரக் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தி பல்வகையான ரோசாப் பூக்கள், கிறிசாந்தமம் மற்றும் ஜேர்பரா மலர்கள் போன்றவற்றை ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு கொண்டு வந்தது. அதேவேளை வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட மிகச் சிறந்த மலர் வடிவமைப்பாளர்களையும் கூடவே அழைத்து வந்திருந்தது. இதன்மூலம் மிகத் திறமையான முறையில் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் இந்நிகழ்வினை உயர்வடையச் செய்தது. இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பெற்றுக் கொண்ட ஞாபகங்கள் அவர்களது மனங்களில் எதிர்வரும் வருடங்களிலும் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும். இந்நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டிருந்த கருப்பொருள் சார்ந்த அரங்க அலங்காரமும் பொதுநலவாய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த இளம் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றுக் கொண்டது.
பத்தரமுல்லையில் உள்ள 'ஜன கலா கேந்திர' நிலையத்தில் இடம்பெற்ற வர்த்தக பேரவை இரவுணவு உபசார நிகழ்வுக்கான அலங்கார வடிவமைப்புக்கள் தாமரை மலர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், எளிமை மற்றும் நேர்த்தி ஆகியவையே இதனது தொனிப்பொருளாக காணப்பட்டது.
'மலர் அலங்கார கலையில் நாம் கொண்டுள்ள படைப்பாற்றல் மற்றும் சிறப்புத்திறன் ஆகியவற்றின் துணையுடன், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எமது நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து நாம் தன்னடக்கத்துடன் மிகுந்த கௌரவமும் அடைகின்றோம். இதற்கென பயன்படுத்தப்பட்ட அனைத்து மலர்களும் முழுமையாக உள்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். இச் செயற்றிட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முகமாக மிக அனுபவமுள்ள 100 மலர் அலங்கரிப்பாளர்களை நாம் கடமையில் ஈடுபடுத்தியதுடன், அவர்கள் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களை அழகுபடுத்துவதற்காக இரவு பகலாக வேலை செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தாம் உருவாக்கிய வடிவமைப்புக்களிற்குள் தமது இதயத்தையும் ஆன்மாவையும் உட்செலுத்தியுள்ளனர். தம்முடைய படைப்பாற்றலை சர்வதேச பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவது மட்டுமன்றி இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் அழகுபடுத்தலை மேற்கொள்ள வேண்டியிருந்தமை, என்னைப் போலவே அவர்களுக்கும் ஒரு சவாலாக அமைந்திருந்தது. எமது ஊழியர்கள் தொடர்ச்சியாக வழங்கிய ஒத்துழைப்புக்காக நான் அவர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். இந்தக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னரும் வெள்ளம்போல எம்மை வந்து சேரும் பாராட்டுக்கள் அவர்களது புத்திக்கூர்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு போதுமான எடுத்துக்காட்டாகும்' என்று கலாநிதி மளவிகே மேலும் குறிப்பிட்டார்.