2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சனச வங்கியுடன் கைகோர்த்துள்ள லபார்ஜ்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குறைவான விலையில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நாடு முழுவதும் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் சனச அபிவிருத்தி வங்கியும் லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனமும் கைச்சாத்திட்டன.
 
கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள சனச அபிவிருத்தி வங்கியின் பிரதான அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அனுராக் காக் மற்றும் சனச அபிவிருத்தி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான மஹேந்திர கல்கமுவ ஆகியோர் அண்மையில் கைச்சாத்திட்டனர்.
 
இதன்போது கருத்து தெரிவித்த லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அனுராக் காக் ' கட்டுப்படி விலைக்கான இந்த வீடமைப்பு திட்டங்களை உலகம் முழுவதும் லபார்ஜ் நிறுவனம் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளது. இலங்கையிலும் தற்போது அமுல்படுத்தியுள்ளோம். சனச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து நாம் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கையால் வறிய மற்றும் சாதாரண தர குடும்பத்தினரின் கனவு இல்லம் நனவாகப்போகின்றது. நிர்மானம் தொடர்பாக எம்மில் அநேகருக்கு குறைவான அறிவே காணப்படுகின்றது. எமது இந்த திட்டத்தின்மூலம் சனச வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கான வரைபு திட்டத்தை துறைசார் நிபுணர்களின் உதவியுடன் வழங்கவுள்ளோம். அத்துடன் வீடு கட்டப்படும் நாள் முதல் அது முடிவடையும் காலம் வரை அங்கு சென்று தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும்   வழங்க எதிர்பார்க்கின்றோம்' என குறிப்பிட்டார்.
 
'இந்த வீடமைப்பு திட்டம் வறிய மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றது. விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், சிறிய வர்த்தகர்கள் ஆகியோருக்கு உரிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான கடனுதவிளை நாம் வழங்கும் அதேநேரம் அதற்கான கட்டடக்கலை திட்டத்தை லபார்ஜ் நிறுவனம் வழங்குகின்றது. வீடு கட்டுதல், வீட்டு வரைவு திட்டத்துக்கு எவ்வாறு அங்கீகாரம் பெற்றுக்கொள்வது போன்ற அறிவு மக்களுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தின் ஊடாக கடனுதவிக்காக காத்திருக்க வேண்டிய காலத்தை குறைத்து விரைவில் தமது வீடுகளை அமைப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கின்றது. சனச வங்கி மற்றும் சனச சங்கங்கள் ஊடாக பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கிராமிய மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் இந்த புதிய செயற்றிட்டம் ஊடாக கம்பஹா மாவட்டத்தில் முதற்கட்டமாக 75 வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். அதனை 100 வரை அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்' என சனச அபிவிருத்தி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான மஹேந்திர கல்கமுவ தெரிவித்தார்.  
 
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் லபார்ஜ் நிறுவனத்தின் உயரதிகாரிகளும் சனச அபிவிருத்தி வங்கியின் உயரதிகாரிகளும் அடங்கலாக பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .