
இலங்கையின் முதல் தர இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான களனி கேபிள்ஸ் பிஎல்சி SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2013 இல் தங்க விருதை தம்வசப்படுத்தியிருந்தது. முதல் தடவையாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த விருதுகள் வழங்கும் வைபவம் இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தின் (SLITAD) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் கூட்டாண்மை துறையை சேர்ந்த நிறுவனங்கள் தமது ஊழியர் குழாமை பயிற்சியளித்து அபிவிருத்தி செய்கின்றமையை ஊக்குவிக்கும் வகையில் முதல் தடவையாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருதுகளுக்காக தெரிவு செய்யும் செயற்பாடானது 10 பிரிவுகளில் அமைந்திருந்தது. இதில், வர்த்தக கொள்கை, கற்றல் மற்றும் அபிவிருத்தி, மக்கள் நிர்வாகம், தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம், நிர்வாக சிறப்பு, மதிப்பளிப்பு மற்றும் கௌரவிப்பு, தொடர்பு மற்றும் அதிகாரமளித்தல், செயற்திறன் மதிப்பிடல் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் போன்றன இதில் உள்ளடங்கியிருந்தன.
தமது ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக அதிகளவு கவனம் செலுத்தும் நிறுவனமாக களனி கேபிள்ஸ் பிஎல்சி திகழ்கிறது. எனவே, SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2013 இல் தங்க விருதை தம்வசப்படுத்திக் கொள்ள நிறுவனத்துக்கு முடிந்தது.
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் மனித வளங்கள் பிரிவின் முகாமையாளர் கிஹான் விதானகமகே கருத்து தெரிவிக்கையில், 'களனி கேபிள்ஸை பொறுத்தமட்டில் மிகப்பெரும் வளமாக கம்பனியின் ஆளணி அமைந்துள்ளது. கம்பனியின் அனைத்து சாதனைகளுக்குமான பெருமையை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். எமது ஊழியர்களின் பிரத்தியேக வளர்ச்சி கருதி நாம் பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக அதிகளவு கவனம் செலுத்தி வருகிறோம். SLITAD விருது, களனி கேபிள்ஸை பணி புரிவதற்கு சிறந்த நிறுவனமாக தரமுயர்த்தியுள்ளது. எந்தவொரு நபரும் பணியாற்றுவதற்கு சிறந்த நிலையமாக இது அமைந்துள்ளது' என்றார்.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு இந்த SLITAD தங்க விருதின் மூலமாக பெருமளவு நற்பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாம் உறுதியான ஆளணியை விருத்தி செய்து கொள்ள முடியும். ஊழியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கு உறுதியான வழிமுறையை களனி கேபிள்ஸ் பிஎல்சி பின்பற்றி வருகிறது. நேர்த்தியான சிந்தனையை கொண்ட ஊழியர்களை நாம் இனங்கண்டு அவர்களை வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் அனுப்பி வருகிறோம். எமது பிரத்தியேக அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமொரு விசேட அம்சம் யாதெனில், ஊழியர்களுக்கு தமது நிபுணத்துவம் சார்ந்த கற்கைகளை முன்னெடுப்பதற்காக நிதி உதவிகளை வழங்குவதையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்.
'எமது ஊழியர்களுக்கு வழமையான வகையில் சம்பள அதிகரிப்புகள் அவர்களின் திறமையான செயற்பாடுகளுக்கமைவாக வழங்கப்படுவதுண்டு. மேலும், அவர்களுக்கு இலவச சீருடைகள், உணவு வேளைகள் மற்றும் போக்குவரத்து போன்றனவும் வழங்கப்படுகின்றன. வருடாந்த ஒன்று கூடல்கள், களியாட்ட நிகழ்வுகளின் மூலம் ஊழியர்களிடையே பரஸ்பர உறவுகளை வளர்க்கும் வகையில் நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்' என விதானகம மேலும் தெரிவித்தார்.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 43 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.
