.jpg)
2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட பொதுத் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை ஜனவரி மாதம் அமுல்படுத்துவது தொடர்பான அறிவித்தலை திறைசேரி வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பொதுத்துறையை சேர்ந்த ஊழியர்கள் 1200 ரூபா அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் தமது வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
நாளாந்த வேதன அடிப்படையில் பொதுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் 40 ரூபா வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு கட்டணம் வழங்கப்படவுள்ளது. இந்த கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 17.3 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது.
2006ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு கொடுப்பனவாக 600 ரூபா வழங்கப்படவுள்ளதுடன், குறித்த திகதிக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு 400 ரூபா அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
தனியார் துறையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை வழங்காத நிறுவனங்களையும், குறித்த அதிகரிப்பை தமது ஊழியர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளார்.