
வெள்ளவத்தை நித்யகல்யாணி ஜுவல்லரி மற்றும் கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகம் ஆகியன இணைந்து, ஜனவரி மாதம் 19ஆம் திகதி வெள்ளவத்தை நித்யகல்யாணி ஜுவல்லரி காட்சியறையில் மாபெரும் குருதி மற்றும் கண் தான செயற்றிட்டமொன்றை முன்னெடுத்திருந்தன.
தேவைகள் நிறைந்த சமூகத்துக்கு தம்மாலான சேவைகளையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வெள்ளவத்தை நித்யகல்யாணி ஜுவல்லரியில் சுமார் 150இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1978ஆம் ஆண்டில் 3 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தாபனம், வைர (டயமன்ட்) நகைகள், பிளாட்டினம் நகைகள், மாணிக்கக்கற்கள் பதித்த நகைகள் விற்பனை செய்வதில் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்ததன் மூலம் இலங்கை ஆபரணங்கள் சந்தையில் முன்னோடி எனும் நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. தாபனத்தில் சுமார் 65 தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்ட தொழிற்சாலை ஒன்றும் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஏற்றுமதி நடவடிக்கைகளையும் தாபனம் ஆரம்பித்திருந்தது. இதன் மூலம் தனது வியாபார செயற்பாடுகளை சர்வதேச நாடுகளுக்கும் விஸ்தரித்திருந்தது. குறிப்பாக, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் துபாய் ஆகிய நாடுகளை குறிப்பிடலாம்.

நித்யகல்யாணி ஜுவல்லரி தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏ.பி.ஜெயராஜா கருத்து தெரிவிக்கையில், 'தேவைகள் நிறைந்த சமூகத்துக்கு நாம் வழங்கும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு செயற்றிட்டமாக இந்த செயற்பாட்டை நாம் கருதுகிறோம். கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகம், கண் தான வங்கி மற்றும் குருதி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்க முடிந்தமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.