2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

A.P.Mathan   / 2014 ஜூலை 22 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, ஜனசக்தி மற்றும் திங்க் கிரீன் இணைந்து அண்மையில் கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
 
இதற்கமைய, குறித்த பிரதேசங்களில் திங்க் கிரீன் குழுவினர் மூலம் இலத்திரனியல் கழிவு தொடர்பில் விழிப்பூட்டும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டு, இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
 
மேலும் திங்க் கிரீன் நிறுவனம் மூலம் ஜனசக்தி நிறுவனத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் மத்தியில் விழிப்புணர்வு திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு இலத்திரனியல் கருவியும் உள்ளக சர்க்யூட் போர்டுடன் உருவாக்கப்படுவதாகவும், அவை இலத்திரனியல் கழிவுகளாகும் போது அவற்றை பொருத்தமான முறையில் அகற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
 
ஜனசக்தி நிறுவனத்தின் சுற்றாடல் முன்னுரிமைகளாக, காலநிலை மாற்றங்கள் மீதான அதன் செயற்பாடுகளின் தாக்கத்தை குறைத்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல் மூலம் சூழலை பாதுகாத்தல் என்பவை அமைந்திருந்தன. இந்த முயற்சிகளில் முடிந்தவரை வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபார பங்காளர்கள் உள்ளடக்கப்படுகின்றனர்.
 
'இந்த திட்டம் காலத்திற்கு ஏற்றதாகும். கழிவு மீள்சுழற்சி சம்பந்தமான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இலத்திரனியல் கழிவு மற்றும் அவை முறையாக எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாகவே ஜனசக்தி நிறுவனம் இந்த பெறுமதிமிக்க முயற்சிக்கு தன் ஆதரவினை வழங்க முன்வந்தது' என ஜனசக்தி காப்புறுதியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.
 
'பேண்தகைமை வெற்றி என்பது வணிகங்கள் அதன் குறிக்கோளை ஆழமாக ஒன்றிணைக்க வழிவகுப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஓர் அர்த்தமுள்ள மட்டத்திற்கு ஏற்படுத்தக்கூடியது. பெரும்பாலான வியாபாரங்கள் இந்த தேவையை உணர்ந்து கொண்டுள்ளதுடன், திங்க் கிரீன் ஆகிய நாம் நிலையான வியாபார நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் கருவிகளை வழங்குகிறோம்' என திங்க் கிரீன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிவஹர் முத்துராமலிங்கம் தெரிவித்தார். 
 
ஆண்டுதோறும் இலங்கையில் 300,000 இற்கும் மேற்பட்ட CPU சிஸ்டம்கள் இறக்குமதி செய்யப்படுவதுடன், அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளது. பெரும்பாலான CPU உபகரணங்கள் 3 ஆண்டுகள் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. வருடந்தோறும் 2 மில்லியன் கைபேசிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அத்துடன் அவை இலத்திரனியல் கழிவுகளாக மாற்றமடையும் போது அவற்றிற்கு சரியான அகற்றல் நுட்பமுறை அவசியமாகும். 
 
70 சத வீதத்திற்கும் மேலான இலத்திரனியல் கழிவுகள் நச்சுத்தன்மை உடையவை. அவை சூழலுக்கு வெளியேற்றப்படும் போது நீர் மாசடைகிறது. சுற்றாடலுக்கு இசைவான முறையில்  இலரத்திரனியல் கழிவுகளை அகற்ற வேண்டியமை எமது பொறுப்பாகும். இவற்றை நில நிரப்பலுக்கு பயன்படுத்துவதனால் மோசமான சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன' என முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
 
இதன் போது ஜனசக்தி கிளைகளில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் விசேட தொட்டிகள் காணப்பட்டன. இச் செயற்திட்டத்தின் இறுதியில் சேகரிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவுகள் 'திங்க் கிரீன்' நிறுவனத்திடம் மீள்சுழற்சிக்காக கையளிக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X