
ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் மற்றும் லங்கா ஜலனி-இலங்கை நீர் பங்காண்மை (SLWP) ஆகியன இணைந்து, இலங்கையின் நீர் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி Jaic ஹில்டன் ஹோட்டலில் விசேட மாநாடு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. ஜனசக்தி நிறுவனமானது மாஓய பிரதேசத்தின் நீர்; தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சமூக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
மாஓய பிரதேச நீர்வரம்பின் மேல் பகுதியானது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து மண் அரிப்பு, திட்டமிடப்படாத குடியமர்வுகள், சிறிய நீர்மின் திட்டங்களுக்கான நீர் பாவனை, தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக வெளியேற்றப்படும் கழிவுகள், ஆற்றினுள் கொட்டப்படும் நகர்ப்புற கழிவுகள் ஆகியவையே இப் பிரதேசத்திலுள்ள நீரின் தரத்தினை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
ஜனசக்தி நிறுவனமானது இப்பிரதேசத்தின் நீர் மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் SLWP உடன் இணைந்து இப் பிரதேச மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை வழங்கியிருந்தது. மேலும் அவர்கள் பாடசாலை வளாகத்தில் மூலிகை தோட்டங்களை அமைப்பதற்கு உதவிடும் வகையில் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். மேலும் மாஓய நீர்வளப் பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் மர நடுகை திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது. இவ் விடயம் தொடர்பில் சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஊடாக வழங்கப்படும் விழிப்புணர்வுடன் இந்த பங்குதாரர் மாநாடானது உள்நாட்டு சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இடம்பெற்றது.
'எமது வளங்கள் விலை மதிப்பற்றவை. அவை பாதுகாக்கப்படல் வேண்டும். பொறுப்பு வாய்ந்த காப்புறுதி வழங்குனர் எனும் ரீதியில், இத்தகைய பெறுமதி வாய்ந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டியமை எமது கடமை என்பதை உணர்ந்தோம்' என விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.
'பெண்கள் குழுக்கள் முதல் அனைத்து சமூக மட்டத்திலும் நீர் பயன்பாட்டு பொறுப்பு தொடர்பில் விழிப்புணர்வை பரப்புதல், நீர் பாதுகாப்பு கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் வெசாக் பெரஹெர தொடர்பான விசேட பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றுடன் நாம் இணைந்து செயற்பட்டோம். மாஓய பகுதியிலுள்ள மக்களிடையே ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை நாம் திடமாக நம்புகிறோம். இது துறைகளுக்கிடையேயான உரையாடலாக உள்ளமையினால், நாடு முழுவதும் சிறந்த நீர் பாதுகாப்பு காணப்படும். இந்த மாநாடானது ஆரம்பப் புள்ளியாக அமைந்திருக்கும் என நாம் எண்ணுகிறோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பங்குபற்றிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறை பொறியியல் பிரிவின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ் முக்கிய உரையாற்றியிருந்தார்.
இந்த நிகழ்வின் குழு விவாதத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, வனப் பாதுகாப்பு திணைக்களம், கொட்டபொல பிரதேச சபை, இலங்கை காணி சீராக்கல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
'வாழ்க்கையின் அடிப்படை தேவையாக நீர் அமைந்துள்ளது. ஜனசக்தி நிறுவனமாகிய நாம், மாஓய பிரதேசத்தினை மேம்படுத்துவதில் இலங்கை நீர் பங்காண்மையுடன் கைகோர்த்துள்ளமை குறித்து மிகவும் பெருமையடைகின்றோம். இந்த திட்டத்தின் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் நாம் சென்றடைந்துள்ளோம். இந்த மாநாட்டின் ஊடாக நீர் பாதுகாப்பினை தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக உருவாக்குதல் வேண்டும்' என ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் ரமேஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
ஜனசக்தி நிறுவனமானது, இலங்கையின் சூழலியலை அதன் முதன்மை அர்ப்பணிப்பாக அடையாளப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஆண்டறிக்கையின் படி, ஜனசக்தியானது அதன் முக்கிய பிரிவாக நீரினை தெரிவு செய்திருந்தது. காப்புறுதி வர்த்தகத்தில் நீரினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுகளின் தீவிரம் குறித்து கருத்தில் கொள்ளப்படும் இந்த திட்டமானது அனைத்து பங்குதாரருக்குமான வெற்றியாக கருதப்படுவதுடன், எமது நீண்டகால கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
