.jpg)
-ச.சேகர்
S&P SL 20 சுட்டி முன்னைய வாரத்தில் உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்த போதிலும், கடந்த வாரம் சரிவான பெறுமதியை பதிவு செய்திருந்தது. கடந்த வாரம் பங்குச்சந்தை சீரான செயற்பாடுகளை பதிவு செய்திருந்தது. சந்தை சீராக்கம் புதன் கிழமை இடம்பெற்றிருந்ததையும் அவதானிக்க முடிந்ததாக பங்கு முகவர்கள் தெரிவித்திருந்தனர். வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,233.71 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4004.42 ஆகவும் பதிவாகியிருந்தன.
செப்டெம்பா 22ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 9,577,248,665 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 64,272 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 61,964 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,308 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், சிரி ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் மீதான விலை உயர்வுகள் காரணமாக சுட்டிகள் நேர் பெறுமதியுடன் நிறைவடைந்திருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு என்பது ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, புக்கிட் தாரா, அக்சஸ் என்ஜினியரிங், லங்கா ஐஓசி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சியெரா கேபிள்ஸ் மற்றும் பிசி ஹவுஸ் ஆகியவற்றில் பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு என்பது ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. மேலும் வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக ஹற்றன் நஷனல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது நிகர கொள்வனவு பதிவாகியிருந்தது.
செவ்வாய்க்கிழமை
சந்தை பரந்தளவில் கலப்பு பெறுமதிகளுடன் நிறைவடைந்த போதிலும், ளுரூP ளுடு20 சுட்டி பெருமளவு சரிவுகளை எதிர்நோக்கியிருந்தது. இதில் சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் லயன் பிரெவரி போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு என்பது கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு என்பது சியெரா கேபிள்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல் மற்றும் ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. மேலும், வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
புதன்கிழமை
சுட்டிகள் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. இதில் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், புக்கிட் தாரா மற்றும் ஷலிமர் (மலே) ஆகியன பங்களிப்பு வழங்கியிருந்தன. புரள்வு பெறுமதி 1.5 பில்லியன் ரூபாவை கடந்திருந்ததுடன், உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு போன்றன ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ், எல்பி ஃபினான்ஸ் மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகியவற்றில் பதிவாகியிருந்தது. சிறியளவிலான ஈடுபாடு என்பது லங்கா ஹொஸ்பிட்டல், ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் சியெரா கேபிள்ஸ் ஆகியவற்றில் பதிவாகியிருந்தது. இதேவேளை கலப்பு ஈடுபாடு என்பது ஜோன் கில்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் எல்பி ஃபினான்ஸ் ஆகியவற்றில் பதிவாகியிருந்தது.
வியாழக்கிழமை
1 பில்லியன் ரூபாவை புரள்வு பெறுமதி கடந்திருந்த போதிலும், சுட்டிகள் மறை பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஸ்ரீலங்கா ரெலிகொம், கொமர்ஷல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்றன இதில் பங்களிப்பை வழங்கியிருந்தன. சிலோன் டொபாக்கோ கம்பனி, எல் பி ஃபினான்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் மீது மொத்த கைமாறல் பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. ஜனசக்தி இன்சூரன்ஸ், பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் டுனாமிஸ் கெப்பிட்டல் ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. டயலொக் ஆக்சியாடா மற்றும் யூனியன் வங்கி போன்றவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. மேலும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் ஆகிய பங்குகளின் மீது அதிகளவு கவனம் செலுத்தியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை
சுட்டிகள் கலப்பு பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 2.7 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, சிஐசி ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. மொத்த பங்கு கைமாறல்கள் புரள்வு பெறுமதியில் 52 வீத பங்களிப்பை வழங்கியிருந்தன. செலான் டிவலப்மன்ட்ஸ் மற்றும் டுனாமிஸ் கெப்பிட்டல் ஆகியவற்றில் சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங், பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. மேலும், வெளிநாட்டவர்கள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் போன்றவற்றின் நிகர பங்கு விற்பனையாளர்களாக பதிவாகியிருந்தனர்.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் டுனாமிஸ் கெப்பிட்டல், சிங்கர் இன்ட, முல்லர்ஸ், சிலோன் பிரின்டர்ஸ் மற்றும் மல்டி ஃபினான்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
லங்கா சென்ச்சரி (உரிமை), பிசி பார்மா, ஈ பி கிறீஸி, ஹியுஜே மற்றும் வலிபல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,600 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,800 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.74 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 215.63 ஆக காணப்பட்டிருந்தது.