
ஓமான் நாட்டை தளமாகக் கொண்டியங்கும் ஆசியா எக்ஸ்பிரஸ் எக்சேன்ஜ் நிறுவன ஊழியர்களுக்காக அண்மையில் செலான் வங்கி ஒரு வாரகால மிக விரிவான பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்தியுள்ளது.
இந்த விரிவான பயிற்சியளித்தல் செயன்முறையின்; போது - வங்கியியலின் முக்கிய அம்சங்கள், பணத்தை கையாளும் நுட்பங்கள், செலாவணி தொழிற்பாடுகள், வாடிக்கையாளர் கவனிப்பு மற்றும் சேவை போன்ற பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதற்கு மேலதிகமாக, உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ள (KYC) கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், பணமோசடிக்கு எதிரான (AML) கீழ்ப்படிதல்கள் / வழிகாட்டல்கள், வேறுபட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை கையாளுதல் மற்றும் போலியான நாணயத்தாள்களை கண்டறிதல் ஆகிய விடயங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசியா எக்ஸ்பிரஸ் எக்சேன்ஜ் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் லதிஸ் விசித்திரன் தலைமையில் 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் கொழும்பில் தங்கியிருந்து வெளியேறும் இறுதிக் கட்டத்தில், செலான் வங்கியைச் சேர்ந்த வங்கியியல் துறைசார் தொழில்சார் நிபுணர்களால் நடாத்தப்பட்ட விரிவான பயிற்சியளித்தல் அமர்வுகள் குறித்து முழுமையான பாராட்டுக்களை தெரிவித்தனர்.
'இலங்கைக்கான பயனுள்ளதும் மறக்க முடியாததுமான ஒரு விஜயமாக இது அமைந்திருந்தது. நானும் எனது குழுவினரும் கொழும்பில் செலான் வங்கியின் ஊழியர்களால் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டோம், பயிற்சியளித்தல் அமர்வுகள் மிகவும் அனுகூலம் அளிக்கக்கூடியவையாக காணப்பட்டன. நாம் பணியாற்றிக் கொண்டிருக்கும் துறை சம்பந்தபட்ட நல்ல பல முக்கிய விடயங்களை இதன்மூலம் கற்றறிந்து கொண்டோம். நாம் இங்கு கற்றுக்கொண்டதை எமது நாட்டுக்கு திரும்பியதும் நிச்சயமாக எம்முடைய சக ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்வோம்' என்று ஆசியா எக்ஸ்பிரஸ் எக்சேன்ஜ் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் லதிஸ் விசித்திரன் கூறினார்.
ஓமானில் உள்ள ஆசியா எக்ஸ்பிரஸ் எக்சேன்ஜ் நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் மொஹமட் அலி அல் கியுமி செலான் வங்கிக்கு நன்றி தெரிவிக்கையில், பல்லாயிரக்கணக்கான எமது வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற சேவைகளை வழங்குவதற்கு எமது ஊழியர்களுக்கு ஆற்றலளிக்கும் பொருட்டு அவர்களது திறன்களை நாம் தொடர்ச்சியாக தரமேம்படுத்தி வருகின்றோம். இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் எமது அணியினரிடம் இருந்து நான் பெற்றுக் கொண்ட அபிப்பிராயங்கள் மிகவும் சாதகமாக காணப்பட்டன. எனவேதான் எதிர்காலத்திலும் செலான் வங்கியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்' என்று குறிப்பிட்டார்.
செலான் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் (சர்வதேசம்) திரு. அருண ரணசிங்க கூறுகையில், 'மத்திய கிழக்கு நாடுகளில் அதிலும் குறிப்பாக ஓமானில் மிகப் பெரியதும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதுமான வாடிக்கையாளர் தளத்தை நாம் கொண்டுள்ளோம். எனவேதான் ஆசியா எக்ஸ்பிரஸ் எக்சேன்ஜ் நிறுவனத்திற்கு வசதியளிக்கும் முகமாக, எம்மிடமுள்ள நிபுணத்துவத்தையும் எவ்வாறு பணியாற்றுவது எனும் வழிவகையையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியமானது என்று நாம் உணர்ந்தோம். இதன்மூலம் மேலும் நெறிப்படுத்தப்பட்ட சேவைகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்படுவதுடன், ஓமான் நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான எமது வாடிக்கையாளர்களுக்கு அது அனுகூலமாகவும் அமையும் என்று தெரிவித்தார்.
