.jpg)
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பாரிய மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தில் சிறந்த இறைவரித்திணைக்களமாக திகழச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைவாக வருமான மேற்பார்வை மற்றும் நிர்வாக தகவல் கட்டமைப்பு (RAMIS) நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், இறைவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளை புதிய கட்டிடத்துக்கு மாற்றும் செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளது.
இறைவரித்திணைக்களத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் வசந்தி மஞ்சநாயக்க கருத்து தெரிவிக்கையில், ”நிதி அமைச்சுக்கு அருகிலுள்ள பகுதியில் அமைந்துள்ள புதிய வளாகத்துக்கு திணைக்களம் இடம்மாறவுள்ளது. இதற்காக 19.6 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பூர்த்தியடைந்தவுடன் இறைவரித்திணைக்களமும் நிதி அமைச்சும் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும்” என்றார்.
”சிங்கப்பூரின் NCS கம்பனியின் உதவியுடன் வருமான மேற்பார்வை மற்றும் நிர்வாக தகவல் கட்டமைப்பு (RAMIS) நிறுவும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டத்துக்கமைய, வரி அறவிடப்படும் முறையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்படும் என்பதுடன், சகல வரி செலுத்துவோரும் ஒன்லைன் மூலமாக தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்” என மேலும் குறிப்பிட்டார்.
இந்த வருமான மேற்பார்வை மற்றும் நிர்வாக தகவல் கட்டமைப்புக்கான (RAMIS) மொத்த செலவீனம் 4.2 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. இது சகல அமைச்சுகளுடனும், நிறுவனங்களுடனும் இணைக்கப்படும். இதன் மூலம் நாட்டில் சிறந்த வரி நிர்வாக முறை அமுல்படுத்தப்படும்.