
இலங்கையில் காணப்படும் வெளிநாட்டு வங்கிகள் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் பெருமளவு பங்களிப்பை வழங்க தயாராக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, வெளிநாட்டு வங்கிகள் இலங்கையில் தமது வெளிநாட்டு வங்கிகளின் வலையமைப்பு இடையீட்டாளர்களாகவும், நிதி மற்றும் நிபுணத்துவத்தை நாட்டின் வெவ்வேறு துறைகளுக்கும் வழங்க முன்வந்துள்ளன.
வெளிநாட்டு வங்கிகளின் பிரதிநிதிகள், மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த பங்களிப்புக்கான தமது உறுதிமொழியை குறித்த வெளிநாட்டு வங்கியினர் வழங்கியிருந்தனர். 12 வெளிநாட்டு வங்கிகளும், இரு முன்னணி வங்கிகளும் நிறைவடைந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மேம்படுத்தப்பட்ட கடன் நிதி வழங்கலை மேற்கொண்டிருந்தன.
குறிப்பாக எச்எஸ்பிசி வங்கியின் நிதி வழங்கல் 20.5 வீதத்தால் அதிகரித்து 155.56 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. ஸ்டான்டர்டட் சார்ட்டட் வங்கியின் நிதி வழங்கல் 12 வீதத்தால் அதிகரித்து 55.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது.
தற்போது நிலவும் குறைந்த வட்டி வீதங்களின் காரணமாக ஓகஸ்ட் மாத இறுதியில் வங்கிகளின் மொத்த கடன் வழங்கல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 வீதத்தால் அதிகரித்து 3.50 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது.