.jpg)
-ச.சேகர்
கடந்த வாரங்களில் வெளியாகியிருந்த எமது வாராந்த பங்குச்சந்தை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்ததை போன்று, கடந்த வாரம் கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் சீரான முறையில் இடம்பெற்றிருந்தது. சுட்டிகள் ஏற்றத்தாழ்வுகளை பதிவு செய்திருந்த போதிலும், குறிப்பிடத்தக்களவு சரிவு மற்றும் உயர்வு பெறுமதிகள் இடம்பெறவில்லை. சந்தை தொடர்ந்தும் ஒரு மந்தகரமாக போக்கை வெளிப்படுத்தியிருந்தது. 2015 ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் நிறைவடையும் வரை இந்நிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,236.37 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4075.14 ஆகவும் பதிவாகியிருந்தன.
டிசெம்பர் 08ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,714,968,788 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 21,795 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 20,622 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,173 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
அபவிசு நேர் பெறுமதிகளுடனும், S&P SL 20 மறை பெறுமதிகளையும் பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 611 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு லங்கா ஐஓசி, பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பான் ஏசியா பவர், லங்கா சீமெந்து மற்றும் ஹேமாஸ் பவர் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். புரள்வு பெறுமதியின் 56 வீத பங்களிப்பை இவர்கள் வழங்கியிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஷலிமர் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய பங்குகளின் மீது விலைச்சரிவு காரணமாக அ.ப.வி.சு மறைபெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 790 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது மொத்த பங்கு கைமாறல்கள் பதிவாகியிருந்தன. யுனைட்டட் மோட்டர்ஸ், டயலொக் ஆக்சியாடா மற்றும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. மேலும், பிசிஎச் ஹோல்டிங்ஸ், சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் பிசி பார்மா ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
புதன்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகியவற்றின் மீதான விலை உயர்வின் காரணமாக சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 1.0 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செலான் வங்கி, ஜனசக்தி இன்சூரன்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் லங்கா ஐஓசி பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சணச டிவலப்மன்ட் வங்கி, அமானா டகாஃபுல் மற்றும் லங்கா சீமெந்து ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை வெளிநாட்டவர்களின் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
வியாழக்கிழமை
லங்கா செரமிக்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் மீது விலைச்சரிவு காரணமாக சுட்டிகள் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 740 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங், லங்கா ஐஓசி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அமானா டகாஃபுல், சுவிஸ்டெக் மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பெருமளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்ததுடன், புரள்வு பெறுமதியில் 65 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லயன் பிரெவரி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியவற்றின் மீது விலைச்சரிவு காரணமாக சுட்டிகள் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 511 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், லங்கா ஐஓசி மற்றும் செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அமானா டகாஃபுல், களனி டயர் மற்றும் ஹேலீஸ் எம்ஜிரி நிட்டிங் மில்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் நுவரெலிய, அஸ்கொட் ஹோல்டிங்ஸ், பிடிஎல், பிசி பார்மா மற்றும் கார்கோ போட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
ஷலிமர், லங்கா செரமிக், மேர்க். சிப்பிங், குட் ஹோப் மற்றும் டீ ஸ்மோல் ஹோல்டர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,600 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,400 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.18 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 210.00 ஆக காணப்பட்டிருந்தது.