Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 22 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாதிப்படையாத பிரதேசங்களையும், கலாசார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களையும் நாடும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த பிரதேசங்கள் பற்றிய விபரங்களை இணையத்தளத்திலமைந்த புவியியல் சார் சுற்றுலா தேசப்பட வழிகாட்டி (Geotourism MapGuide) மூலமாக பெற்றுக் கொள்ளவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் அங்கத்துவ நிறுவனமான IFC மூலமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், இந்த செயற்திட்டம், புவியியல் சார் சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்தி, உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள பங்களிப்புச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
கிழக்கு மாகாண புவியியல் சார் சுற்றுலா தேசப்பட வழிகாட்டி (Eastern Province Geotourism MapGuide) இணையத்தளம் என்பது, உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 22 புவிவியல்சார் சுற்றுலா நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. இந்த இணையத்தளத்தில் இலங்கையின் கிழக்கு பிரதேசத்தின் பிரத்தியேகமான நிலத்தோற்றங்கள், மக்கள் மற்றும் கலாசாரம் ஆகியன பிரதிபலிக்கப்படுகின்றன.
இந்த திட்டம் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பெடி விதான கருத்து தெரிவிக்கையில், 'தேசப்பட வழிகாட்டி (MapGuide) என்பது இந்த பிராந்தியத்தின் விசேட அம்சங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. கிழக்கு பிராந்தியத்தின் கவரும் பகுதிகளை ஊக்குவிக்க நீண்ட கால அடிப்படையிலான வளங்களை வழங்குவதற்கு மேலாக, இந்த திட்டம் சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்' என்றார்.
தேசப்பட வழிகாட்டியை (MapGuide) உருவாக்குவதற்கு சமூகத்தை அடிப்படையாக கொண்ட நியமன செயன்முறை பின்பற்றப்பட்டிருந்தது. உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எந்தவொரு அடையாளப்பகுதி, கவர்ந்திழுக்கும் பகுதி, செயற்பாடுகள் இடம்பெறும் பகுதி, நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் உணவுகள் போன்ற பிராந்தியத்தின் சிறப்பியல்பை உணர்த்தும் வகையிலமைந்த பிரதேசங்களை பிரேரித்திருந்தனர். சகல பகுதிகளும் கவர்ந்திழுக்கும் விடயங்களும் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், National Geographic Society இடமிருந்து பங்குபற்றலுக்கான சான்றிதழையும் பெறும்.
National Geographic Society இன் சுற்றுலா நிகழ்ச்சித்திட்டங்கள், தேசப்படங்கள் பிரிவின் பணிப்பாளரான ஜேம்ஸ் டியோன் கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாண புவியியல் சார் (Eastern Province Geotourism) இணையத்தளம் என்பது இந்த பிரதேசத்தின் கலாசார மற்றும் புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த செயற்திட்டத்தின் மூலமாக, உள்ளூர் சமூகங்களை ஒன்றிணைப்பதன் முக்கியத்துவம், பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை மிடுக்கான முறையில் பகிர்ந்து கொள்வது மற்றும் எதிர்கால தலைமுறையினருக்காக அவற்றை பேணுவது போன்றன வலியுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
தேசப்பட வழிகாட்டியை (MapGuide) www.easternsrilanka.natgeotourism.com எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம். இந்த இணையத்தளம் தொடர்ந்து மெருகேற்றம் செய்யப்படும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் இணைந்து புதிய பிரதேசங்கள், நிகழ்வுகள் மற்றும் விசேட பகுதிகள் போன்றவற்றை பிரேரிக்க முடியும்.
IFC இன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் அடம் செக் கருத்து தெரிவிக்கையில், 'இந்த புவியியல் சார் சுற்றுலா (Geotourism) செயற்திட்டம்;, சமூகங்களை ஒன்றிணைத்துள்ளது மட்டுமல்லாமல், சிறியளவிலான வியாபாரங்கள் மற்றும் சம்மேளனங்களையும் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலமாக குறிப்பிடத்தக்க சுற்றுலா அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். சிறு வியாபாரிகள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், பிரதேசத்துக்கு பிரத்தியேகமான கவர்ச்சிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வியாபாரங்களும் முன்னேற்றமடைவதற்கு ஏதுவாக அமையும்' என்றார்.
MapGuide இணையத்தளத்தை, இலங்கையின் மிகப்பெரிய இணையத்தளம் சார்ந்த சுற்றுலா நிறுவனமான Findmyfare.com பராமரிக்கிறது. இந்த பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுலா ஊக்குவிப்பு சபை மற்றும் இதர தனியார் துறை பங்குபற்றுநர்களின் பிரதிநிதிகள் வழிகாட்டல்களை வழங்குகின்றனர். 2012 இல் தாபிக்கப்பட்ட findmyfare.com, இலங்கையின் முதல் தர சுற்றுலா போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் ஸ்தாபனமாகும். சந்தையில் காணப்படும் சிறந்த பயண சலுகைகள் இந்த இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டெலி, கருத்து தெரிவிக்கையில், 'எந்தவொரு செயற்திட்டத்தின் நிலையாண்மைக்கும் உரிமையேற்றல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதை எமது ஐரோப்பிய ஒன்றிய அனுபவத்தின் மூலமாக நாம் அறிந்துள்ளோம், குறிப்பாக இந்த செயற்திட்டம் சகல அத்தியாவசியமான உள்ளம்சங்களையும் கொண்டுள்ளது. சமூக அங்கத்தவர்களை உள்வாங்குவதன் மூலமாகவும், அவர்களில் பெருமை மற்றும் உரிமையை உறுதி செய்வதன் மூலமாக இந்த திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுவதை உறுதி செய்யலாம். சுற்றுலாப்பயணிகளை பொறுத்தமட்டில், அவர்களுக்கு விசேட அனுபவமாக இது அமைந்திருக்கும். எனவே இந்த செயற்திட்டம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுவதற்கான சிறந்த முன்னுதாரணமாக திகழும்' என்றார்.
IFC மற்றும் National Geographic Maps பிரிவு ஆகியவற்றின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட MapGuide மற்றும் Geotourism இணையத்தளம் ஆகியவற்றுக்கான நிதி உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் மாவட்ட அபிவிருத்திக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி எனும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நோர்வே அரசும் வழங்கியிருந்தன. மேலதிக உதவிகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபை மற்றும் Findmyfare.com ஆகியன வழங்கியிருந்தன.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago