2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ACCMT நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான செயலமர்வு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் செய்மதி தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுவரும் அரச சார் அமைப்பான நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆதர் சி கிளார்க் மையம் ACCMTஏற்பாடு செய்துள்ள பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான செயலமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (21) கொழும்பு கலதாரி ஹோட்டலில் காலை 9 மணி முதல் இடம்பெறவுள்ளது.

இந்த செயலமர்வில் இலங்கை அரச துறையை சேர்ந்த நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் உயர்மட்ட அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளனர். இந்த செயலமர்வின் போது, இலங்கையின் அரச துறைகளுக்கு எந்த வகையில் செயமதி தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை பயன்படுத்தி மக்களுக்கு மிகவும் உயர்நுட்பம் வாய்ந்த சேவைகளை வழங்க முடியும் என்பது குறித்த விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

இந்த செயலமர்வு குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் முன்னோடியான சந்திப்பொன்று அண்மையில் மொரட்டுவ பகுதியில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆதர் சி கிளார்க் ACCMT நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது, ஊடகவியலாளர்கள் மத்தியில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரத் பனாவென்ன உரையாற்றுகையில்,

'இலங்கையை பொறுத்தமட்டில் சகல துறைகளிலும் செய்மதி தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும். இந்த செய்மதி தொடர்பாடல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பிரயோகப்படுத்துவது, அதற்காக செலவாகக்கூடிய தொகை, இந்த தொழில்நுட்பம் ஏனைய நாடுகளில் எவ்வாறு பிரயோகிக்கப்படுகின்றது போன்ற பல விடயங்களை அரச துறையை சேர்ந்த நிறுவனங்களின் பிரதான அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த செயலமர்வை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த நிகழ்வுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த செய்மதி தொழில்நுட்பம் தொடர்பான உயர்மட்ட அறிவை கொண்ட நபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்'
'இந்த தொழில்நுட்பமானது இலங்கையில் தற்போது முதிர்ச்சியடைந்து வருகிறது. இன்னும் சிறிது காலத்தில் மக்கள் அறியாமலே இந்த தொழில்நுட்பத்தை தமது நாளாந்த நடவடிக்கைகளில் பயன்படுத்துவார்கள். இது குறித்து அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நாம் தெளிவுபடுத்த தீர்மானித்துள்ளோம்' என்றார்.

1984ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆதர் சி கிளார்க் நிறுவனம் ACCMT இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதுடன், விண்வெளி தொடர்பான ஆய்வுகள், செய்மதி தொடர்பாடல்கள் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் குறித்து அதிகளவு கவனத்தை இந்த நிறுவனம் செலுத்தி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .