
கணினி, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளில் 6,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்கி வரும் SLIIT கல்வியகம், பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்துடன் (CIMA) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இவ்விரு கல்வியகத்தின் சார்பாகவும் CIMA-UK இன் முகாமைத்துவ பணிப்பாளர் அன்ட்ரூ ஹார்டிங் மற்றும் SLIIT நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான பேராசிரியர் லலித் கமகே ஆகியோர் உடன்படிக்கையை கைமாற்றிக் கொண்டனர். இந் நிகழ்வில் SLIIT மற்றும் CIMA நிறுவனத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த இணைப்பின் ஊடாக SLIIT நிலையத்தில் வணிக முகாமைத்துவ பட்டதாரி நெறியை பயிலும் மாணவர்கள் வணிக முகாமைத்துவ பட்டத்தையும், CIMA இன் தொழில்சார் தகுதியையும் பெற்று சவால்களை எதிர்கொள்ளக் கூடிய திறனுடன் தொழிற்துறையில் பிரவேசிக்க முடியும்.
இந்த பங்காண்மை மூலம் மாணவர்களின் செலவும் நேரமும் மிச்சமாக்கப்படும். மேலும் இதன் மூலம் வணிக முகாமைத்துவம் மற்றும் கணக்கியலின் தரம் உயர்வடையும். SLIIT நிறுவனத்தின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் BBA பட்டதாரி கற்கையை பயிலும் மூன்றாம் வருட இளமாணி பட்டதாரிகளும், கற்கையை பூர்த்தி செய்தவர்களும் இப் பாடத்திட்டத்தின் சான்றிதழ் மட்டத்தின் 5 பாடங்களிலிருந்தும், அதன் செயற்பாட்டு பிரிவின் என்டர்பிரைஸ் செயற்பாடுகள் (E1) பாடத்திலிருந்தும் விடுபட முடியும். மேலும் CIMA நிறுவனத்தில் தொழில்சார் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்கள் SLIIT இன் வணிக முகாமைத்துவ கற்கையை பயிலும் பட்சத்தில், அவர்களும் மேற்குறிப்பிட்ட அனுகூலத்தை பெற முடியும்.
இந் நிகழ்வில் SLIIT இன் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் SLIIT மற்றும் CIMA கைகோர்த்துள்ளது. கடந்த 2004,2005ஆம் ஆண்டுகளில் MSc. in Information Management கற்கைகளுக்கு CIMA உடன் இணைந்தோம். எமது தொடர்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இந்த உடன்படிக்கையின் மூலம் மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்சார் தகைமையை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
கல்வி தகுதியை மாத்திரம் வழங்காது தொழில்சார் தகுதியையும் வழங்கி பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்வதற்கான திறனை CIMA வழங்குகிறது. சர்வதேச ரீதியில் CIMA நிலையம் மிகக்குறுகிய காலத்தினுள் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும். எதிர்கால தலைமுறையினரை போட்டிகரமிக்க உலகச் சந்தையினை எதிர்கொள்ளக் கூடிய வகையில் சர்வதேச திறனுள்ளவர்களாக உருவாக்குவதே எமது நோக்கமாகும். இந்த உடன்படிக்கையின் மூலம் எமது எதிர்கால சந்ததியினரை மேலும் வலுப்படுத்த முடியும்' என CIMA மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் வட ஆபிரிக்க பிராந்திய பணிப்பாளர் பிராட்லி எமர்ஸன் தெரிவித்தார்.
'அவுஸ்திரேலியா, மலேசியா, பாகிஸ்தான், UAE, போலந்து மற்றும் UK போன்ற நாடுகளில் தொழில்முறை கல்வித்திட்டங்களை வழங்கி வருகின்றோம். இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இத்தகைய கற்கைநெறிகள் நம்நாட்டு இளைஞர்களின் கனவினை நனவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கும் என நான் நம்புகிறேன். உள்நாட்டு கல்வி நிலையத்தில் பயிலும் பட்டதாரிகளுக்கு சர்வதேச கல்வி வாய்ப்பினை வழங்கும் நோக்கில் SLIIT உடன் மேற்கொள்ளப்பட்ட இப் புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என CIMA-UK இன் முகாமைத்துவ பணிப்பாளர் அன்ட்ரூ ஹார்டிங் தெரிவித்தார்.