
உலகின் முன்னணி சர்வதேச பொருட்கள் விநியோக சேவை வழங்குநரான DHL Express, செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக திமித்ரி பெரேரா அவர்களை நியமித்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக பணியாற்றிய மனிஷ் பட்டேல், பிராந்திய பொறுப்பை ஏற்று சிங்கப்பூருக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதவியை பெற்றுக் கொள்ளும் முன்னர், திமித்ரி, DHL Express Sri Lanka இல் தேசிய வியாபார முகாமையாளராக பணியாற்றியிருந்தார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இவர் இந்த பதவியை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக இவர் தேசிய விற்பனை முகாமையாளராக DHL உடன் இணைந்து கொண்டார்.
இலங்கைச் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி எனும் பதவிக்கு பெருமளவு அனுபவத்துடன் நியமிக்கப்பட்டுள்ள திமித்ரி, கடந்த மூன்று ஆண்டுகளில் உறுதியான விற்பனை பெறுபேறுகளை பதிவு செய்துள்ளார். உயர் வினைத்திறன் வாய்ந்த மற்றும் அதிகளவு ஊக்கத்துடன் பணியாற்றும் வணிக அணியினரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
DHL Expressஇன் தென் ஆசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய நாடுகளுக்கான சிரேஷ்ட பிரதித்தலைவர் யஸ்மின் அலதத் கான் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் எமது பிரசன்னம் என்பது திமித்ரி அவர்களின் நியமனத்துடன் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கிறோம். இந்த உறுதியான தலைமைத்துவத்துடன், வணிக நோக்கு மற்றும் வியாபாரம் தொடர்பிலான ஆழமான புரிந்துணர்வு போன்றவற்றின் ஊடாக எமது வியாபாரத்தை இலங்கையில் முன்நோக்கி கொண்டு செல்வதற்கு பெரும் உதவியாக அமைந்திருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்றார்.
தனது புதிய நியமனம் தொடர்பில் திமித்ரி கருத்து தெரிவிக்கையில், 'DHL Express இன் இலங்கைச் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக தெரிவாகியுள்ளமை தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் நாம் உறுதியான சந்தையை கொண்டுள்ளோம். எதிர்வரும் ஆண்டுகளில் நாம் எமது நிலையை 'நன்று' என்பதிலிருந்து 'சிறந்தது' எனும் நிலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். எமது சகல ஊழியர்களும் Certified International Specialist (CIS) நிகழ்வை பூர்த்தி செய்துள்ளனர். அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப சிறந்த சேவைகளை வழங்குவதற்கான ஆளுமை மற்றும் அறிவை வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் அறிவுபூர்வமான குழுவுக்கு தலைமைத்துவம் தாங்குவது என்பது பெருமைக்குரிய விடயமாகும். எமது வியாபாரத்தில் சகல பிரிவுகளிலும் சிறப்பான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இதன் மூலம் நிலையான வியாபாரத்தை கட்டியெழுப்பிக் கொள்ள முடியும்' என்றார்.
22 வருட கால அனுபவத்தில், திமித்ரி, பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். அவற்றில் தகவல் தொழில்நுட்பம், வாகனங்கள், விளம்பரம்/ ஊடகம் மற்றும் ஆடைத் தொழில்துறை போன்றன உள்ளடங்குகின்றன. DHL உடன் இணைந்து கொள்ளும் முன்னர் இவர் Avery Dennison Sri Lanka நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் MBA பட்டத்தை திமித்ரி கொண்டிருப்பதுடன், பிரித்தானியாவின் சந்தைப்படுத்தல் பட்டயக் கல்லூரியின் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஆசியா பசுபிக் சந்தைப்படுத்தல் சம்மேளனத்தின் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் நிபுணர் பட்டத்தையும் கொண்டுள்ளார்.