Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
காடுகளில் இருந்து மீட்கப்படும் மிருகங்களை மிருகக் காட்சி சாலைக்கு அனுப்பாமல் மீண்டும் அவற்றிற்குரிய வதிவிடமான காடுகளுக்கே திருப்பி அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் கேட்டு ஒடாரா மன்றம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
ஒடாரா குணவர்தன் ஜனாதிபதிக்கு இது சம்பந்தமாக எழுதியுள்ள கடிதத்தில் சுதேசிய வகை நான்கு கரடிக் குட்டிகளும் ஒரு சிறுத்தைக் குட்டியும் தற்போது வனவிலங்கு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இந்த மிருகங்களை அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட வாகொல்லையில் உள்ள பின்னவலை திறந்தவெளி மிருகக் காட்சி சாலைக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமையையும் அவர் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த விடயத்தில் ஒரே விதமான சிந்தனைப் போக்குடைய அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் எழுதியுள்ள கோரிக்கை கடிதங்களையும் இணைத்து ஜனாதிபதிக்கு மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் தொடர்பான நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த விடயத்தில் ஒருமித்த எதிர் கருத்தை கொண்டுள்ளனர் என்பதை விளக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
பின்னவலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய மிருகக் காட்சி சாலையில் ஏற்கனவே ஆறு சிறுத்தைகள் உள்ளன. அப்படியிருக்கையில் ஏன் ஏழாவது ஒன்றும் அவசியமாகின்றது என ஒடாரா மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில் காணப்படும் சுதேசிய வகை கரடிகள் அருகி வரும் ஒரு உயிரினம் என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஒரு உயிரினமாகும். இந்த மிருகங்களில் மூன்று தற்போது அம்பாந்தோட்டை சபாரி பூங்காவிலும் மற்றது தெஹிவலை மிருகக் காட்சி சாலையிலும் உள்ளது. வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளினதும், மிருக வைத்திய அதிகாரிகளினதும் எதிர்ப்பையும் மீறி இவை இவ்வாறு வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள இந்த வேண்டுகோள் பற்றி விளக்கமளித்த ஒடாரா குணவர்தன 'காடுகளில் இருந்து மிருகங்களைப் பெற்று மிருகக் காட்சி சாலைகளை நிரப்பும் பழக்கத்துக்கு நாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். எங்களைப் போலவே எல்லா மிருகங்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளது. அதனுடைய வாழ்விடப் பகுதியில் இருந்து அதை அப்புறப்படுத்தக் கூடாது. அவற்றை அவற்றின் வாழ்விட சூழலில் அவற்றுக்குரிய குடும்ப சமூக சூழலில் வாழ விட வேண்டுமே தவிர எங்களுக்காக அவற்றை காட்சிப் பொருளாக்க கூடாது. அவற்றைப் பாதுகாப்பதில் சகல விதமான கவனமும் செலுத்தப்பட வேண்டும். மேலதிகமாக மிருகங்களை சேர்த்து அவற்றின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவற்றை காட்சிப் பொருளாக கூண்டில் அடைத்து வைப்பதற்காக மேலதிக மிருகக் காட்சி சாலைகள் நிறுவும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்தக் கரடிகளும் சிறுத்தையும் உடனடியாக அவற்றின் வாழ்விட பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இது வன திணைக்களத்தின் பொறுப்பாகும். இந்த அழகிய மிருகங்கள் அவற்றின் இயல்பான வாழ்விடத்தில் வாழும் உரிமை பெற்றவை. அந்த உரிமைகள் நிலைநாட்டப்பட்டு அவற்றுக்கு நியாயம் வழங்கப்படும் என்று நம்புகின்றேன்' என்று கூறினார்.
'ஒரு நாடு என்ற வகையில் சரியான மிருக நலன்களைப் பேணும் வகையிலும் சகல உயிரினங்களினதும் கௌரவத்தைப் பேணும் வகையிலும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள நாம் அனைவரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த மிருகங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லாவிட்டாலும் கூட அவற்றின் உரிமைகளை மறுக்க முடியாது. பல மிருகங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல மிருகங்கள் தொடர்ந்து பாதிப்புக்களைச் சந்திக்கவுள்ளன. மிருகங்கள் மீது அன்பு காட்டக் கூடிய கருணை உள்ளம் கொண்ட என்னைப் போன்ற பலர் இந்த நாட்டில் உள்ளார்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்' என்று அவர் மேலும் கூறினார்.
காலநிலை சீர்கேட்டுக்கு முகம் கொடுத்தல், மிருகங்கள் மற்றும் தாவர இனங்கள் என்பனவற்றைப் பாதுகாத்தல் அவை பற்றிய விழிப்புணர்வு நல்லாட்சி, கொள்கை மாற்றம் என்பனவற்றை ஏற்படுத்தல் போன்ற நிலையான மாற்றங்களுக்காக ஒரு முன்னோடியாகப் பணியாற்றுவதை நோக்காகக் கொண்டே ஒடாரா மன்றம் செயற்படுகின்றது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago