2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஜூன் மாதம் இலங்கையில் நிர்மாணக் கண்காட்சி

Gavitha   / 2017 ஜனவரி 24 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

“Construction Expo 2017”, நிர்மாணம் மற்றும் கட்டட தொழிற்றுறையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியவாறு, ஜுன் 2,3 மற்றும் 4 ஆகிய தினங்களில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

“இந்நிகழ்வில் கட்டடம் மற்றும் நிர்மாணத் தொழிற்றுறைத் தொடர்பான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வெளிக்காண்பித்து, பங்குபற்றவுள்ளவர்களை, இத்தொழிற்றுறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும் முக்கியமான சேவை வழங்குநர்களுடன் இடைத்தொடர்புபடுத்துவதற்கும் உதவும்,” என்று இலங்கை நிர்மாணிப்பாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான கலாநிதி ரொஹான் கருணாரட்ன குறிப்பிட்டார்.  

தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் இடம்பெறுகின்ற நிர்மாணக் கண்காட்சி 2017, மீண்டும் தொழிற்றுறையின் மிகச் சிறந்த அம்சங்களைக் காண்பிக்கவுள்ளது. “பசுமையான இலங்கையை நோக்கி நடைபோடுதல்” என்பதே இந்நிகழ்வின் எண்ணக்கருவாகும். கடினமான ஒரு காலகட்டத்துக்கு  முகங்கொடுத்த நிர்மாணத் தொழிற்றுறை தற்போது சற்று தலைநிமிர ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

தொழில் தகைமை சார்ந்தவர்கள், முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்பவர்கள், கொள்வனவாளர்கள், வழங்குனர்கள், வர்த்தகர்கள், விநியோகத்தர்கள் மற்றும் பலரும் பார்வையாளர்களுள் அடங்கியுள்ளனர். “இந்த ஆண்டு கண்காட்சியில் 15,000 முதல் 20,000இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவர் என நாம் எதிர்பார்ப்பதுடன், ஒப்பந்தகாரர்கள், கட்டடக் கலைஞர்கள், நில அளவையாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் இத்துறையுடன் தொடர்புபட்ட ஏனைய தரப்பினர் அடங்கலாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.  

கடந்த காலத்தைப் போலவே இம்முறையும், உள்நாட்டில் நிர்மாணத் தொழிற்றுறையுடன் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்குப் புறம்பாக, வெளிநாட்டினரும் கண்காட்சிக்கூடங்களை அமைக்கவுள்ளமை, நிகழ்வின் முக்கியமான அம்சங்களுள் ஒன்றாகும் என கலாநிதி கருணாரட்ன குறிப்பிட்டார். சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து நிர்மாணத் தொழிற்றுறை வல்லுநர்கள் தமது அதிநவீன போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

உற்பத்திகள் மற்றும் சேவை வழங்குநர்கள் என நிர்மாணத் தொழிற்றுறையுடன் தொடர்புபட்ட பல்வேறு வடிவங்களை எதிர்பார்க்கும் நுகர்வோர், மிகவும் ஆவலுடன் ஒன்றுகூடும் ஒரு மேடையாக, இக்கண்காட்சி கடந்த காலங்களில் பிரபலமடைந்துள்ளது.புதிய வாடிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான மிகவும் வலுவான மற்றும் விரிவான ஒரு தளமேடையாகவும் இக்கண்காட்சி அமைந்துள்ளது என கண்காட்சியாளர்கள் கருதுவதாகவும் கலாநிதி கருணாரட்ன குறிப்பிட்டார்.நிர்மாணத்துறை வழங்குநர்கள், நிர்மாண உபகரணங்கள், நிர்மாண இயந்திரங்கள், நிர்மாண தொழில்நுட்பம், நிர்மாண மூலப்பொருட்கள், நிர்மாண சேவை, கட்டட மூலப்பொருள், கட்டட வழங்கல்கள், கட்டட மேம்பாட்டு சேவை, கட்டட இயந்திரங்கள், கட்டட உபகரணங்கள், சீமெந்து, மணல், செங்கல் மற்றும் ஒட்டு பலகை தொடர்பான அம்சங்கள் இக்கண்காட்சி நிகழ்வில் இடம்பெறவுள்ளன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X