2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஜனவரியில் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வட பிராந்தியாத்தில், தொடர்ந்து 8ஆவது ஆண்டாக, யாழ். சர்வதேச வர்த்தகச் சந்தை (JITF 2017) நிகழ்வு, எதிர்வரும் 2017 ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

யாழ். மாநகர சபை, இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் சர்வதேச வர்த்தக சபை ஆகியவற்றின் ஆதரவுடன், யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd நிறுவனத்தால் JITF 2017 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் மற்றும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் ஆகியனவும் இதற்கு அங்கிகாரமளித்துள்ளன.  

வடக்கிலுள்ள குடிமக்கள், வியாபாரிகள், வர்த்தர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் என அனைவரும் “தவறாது கட்டாயமாக” கலந்துகொள்ள வேண்டிய ஒரு நிகழ்வாக இக்கண்காட்சி மாறியுள்ளதுடன், பல்வேறுபட்ட தேவைகள் மற்றும் சேவைகளை ஈடுசெய்யும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கண்காட்சிக்கூடங்கள் இந்த வர்த்தகச் சந்தையில் இடம்பெறவுள்ளன. 2016ஆம் ஆண்டில் இந்நிகழ்வைப் பார்வையிடுவதற்கு 60,000 இற்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பரந்த அளவிலான முதலீட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் விசாலமான எண்ணிக்கையில் ஒன்றுகூடும் ஒரு தனித்துவமான நிகழ்வாக இது கருதப்படுகின்றது.  

இப்பிராந்தியத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்ற பாரியளவிலான உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள், முன்னர் அமைந்திராத வகையில் இப்பிராந்தியத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது. வாய்ப்புக்கள் மற்றும் முதலீடு தொடர்பில் பரிசீலிப்பதற்காக 75 பேரைக் கொண்ட இந்தியக் குழு ஒன்றும் விசேடமாக இதில் கலந்து கொள்ளவுள்ளது.  

உலகிலுள்ள பல்வேறு வியாபார மற்றும் வாழ்க்கைமுறை நகரங்களுக்கு ஈடாக இப்பிராந்தியம் மாறுவதை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் பிராந்தியங்கள், வீதிகள், மின்சாரம், பாலங்கள் மற்றும் ஏனைய பல கோணங்களில் தற்போது அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

நிர்மாணம், விருந்தோம்பல், உணவு, பான வகை மற்றும், பொதியிடல், மோட்டார் வாகனம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள், ஆடையணி மற்றும் புடவை, விவசாயம், நுகர்வோர் உற்பத்திகள் மற்றும் பல தொழிற்துறைகள் மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் உள்ளடங்கவுள்ளன.  

இந்நிகழ்வானது “வடக்குக்கான நுழைவாயில்” என அழைக்கப்படுகின்றது. தெற்கு மற்றும் வடக்கிலுள்ள மக்களுக்கு இடையில் வர்த்தகரீதியாக இணைப்பை ஏற்படுத்துவதில் கூட்டு வியாபார முயற்சிகள், ஒன்றிணைவுகள், பாரியளவிலான கோரல்கள் போன்ற முன்னெடுப்புக்கள் நிகழ்வின் சிறப்பம்சங்களாகக் காணப்படும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .