2024 மே 04, சனிக்கிழமை

ஜப்பானிடமிருந்து 3 புதிய மானிய உதவித் திட்டங்கள்

Freelancer   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 செயற்திட்டங்களுக்கான நிதி மானிய உதவிகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் நிதி அமைச்சு, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர். முதலாவது திட்டம் 200 மில்லியன் ஜப்பானிய யென்களுக்கானதாக (சுமார் ரூ. 416 மில்லியன்) அமைந்திருப்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இரண்டாவது திட்டம் 404 மில்லியன் ஜப்பானிய யென்கள் (சுமார் ரூ. 842 மில்லியன்) பெறுமதி வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், வட மாகாணத்தின் பெண்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. மூன்றாவது திட்டம் 1 பில்லியன் ஜப்பானிய யென்கள் (சுமார் ரூ. 2 பில்லியன்) பெறுமதி வாய்ந்ததாக, கரையோரப் பகுதிகளில் கடல்சார் எண்ணெய் கசிவுகளுக்கு துலங்கலை வெளிப்படுத்தலை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

(1) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்கான ஆதரவு

கடற்றொழில் அமைச்சினூடாக, கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய சாதனங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படும். ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அவசர படகு மற்றும் மீட்புப் படகு போன்றன, கடல்சார் விபத்துகளின் போது துலங்கலை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்த எதிர்பார்ப்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பிழைக்கும் வீதத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கின்றது. மேலும், மீன்பிடிக் கடற்றொழில் சூழல்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதனூடாக கடற்றொழில் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆதரவு அமைந்திருக்கும்.

(2) வட மாகாணத்தின் பெண்களுக்கு ஆதரவு

கர்ப்பிணித் தாய் மற்றும் குழந்தை சுகாதார சாதனங்கள் அடங்கலாக, பெண்களுக்கு ஆதரவளிக்கும் சாதனம் வட மாகாண சுகாதார திணைக்களத்தினூடாக வழங்கவும், கல்வி அமைச்சினூடாக தொழிற்பயிற்சிகளுக்கு அவசியமான தொழிற்துறைசார் தையல் இயந்திரங்களும் வழங்கப்படும். இவற்றினூடாக வட மாகாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தை சுகாதாரத்தை மேம்படுத்தவும், பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்கு இந்த உதவி பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(3) SLCG இன் எண்ணெய் கசிவு துலங்களை மேம்படுத்தல் மற்றும் கொள்ளளவு திறனை மேம்படுத்துவதற்கான ஆதரவு

இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவுக்கு எண்ணெய் கசிவு துலங்கலுடன் தொடர்புடைய சாதனங்கள் (எண்ணெய் பிரித்தெடுப்புக்கான கப்பல்கள், எண்ணெய் மீட்புக் கட்டமைப்புகள் போன்றன) வழங்கப்படும். அதனூடாக, கரையோரப் பிரதேசங்களில் கடல்சார் எண்ணெய் கசிவுகளுக்கு துலங்கலை வெளிப்படுத்தக்கூடிய வகையில் திறன் மேம்படுத்தப்படும். எண்ணெய் கசிவு விபத்துகள், பாதிப்பு பல இடங்களுக்கு பரவுவதை தடுப்பது மற்றும் கடல்சார் சூழலை பாதுகாப்பது போன்றவற்றுக்கு துரித கதியில் செயலாற்றுவதற்கு இந்த ஆதரவு உதவியாக அமையும்.

பல்வேறு துறைகளில் இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்க ஜப்பானிய தூதரகம் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த மானிய உதவிகளினூடாக, மீன்பிடிப் பாதுகாப்பு, பெண்கள் வலுவூட்டல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிப்பதுடன், சுதந்திரமான மற்றும் திறந்த கடல்சார் கட்டமைப்பை கட்டியெழுப்பி பேணுவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .