2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் இரண்டாம் காலாண்டுக்குரிய நிதிப் பெறுபேறுகள் வெளியீடு

S.Sekar   / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டு பகுதியில், டோக்கியோ சீமெந்து குழுமம் (டோக்கியோ சீமெந்து), புரள்வு பெறுமதியாக ரூ. 11,885 மில்லியனை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

மூலப்பொருட்கள் விநியோகத்தில் தாமதம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் டோக்கியோ சீமெந்தின் விற்பனை பெறுமதி 3 சதவீதத்தால் குறைந்திருந்தது.

வரிக்கு முந்திய இலாபமாக குழுமம் ரூ. 173 மில்லியனை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 2,277 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 132 மில்லியன் பதிவாகியிருந்ததுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 2,104 மில்லியனாக காணப்பட்டது.

அதிகரித்துச் செல்லும் மூலப்பொருட்களின் விலைகள், நாணயப் பெறுமதி மதிப்பிறக்கம் மற்றும் சரக்குக் கையால் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றினால் உற்பத்திச் செலவு பெருமளவு அதிகரித்திருந்தமை காரணமாக இந்த வீழ்ச்சி பதிவாகியிருந்தது. மேலும், இதர சகல செலவுகளும் நடப்பு நிதியாண்டில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுடன், அதன் காரணமாக நிறுவனத்தின் இலாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

டோக்கியோ சீமெந்து ஆகக்கூடிய கொள்ளளவில் இயங்கிய போதிலும், இந்தக் காலப்பகுதியில் சந்தையில் சீமெந்து விநியோகத்தில் தட்டுப்பாட்டை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. சீமெந்தின் மீது நிர்ணயிக்கப்பட்டிருந்த அதியுச்ச சில்லறை விலை காரணமாக, சந்தையின் போக்குக்கமைய பாரிய-பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் விலைகளை சீராக்கம் செய்வதற்கு முடியாமல் போயிருந்தது. இந்த விடயங்கள் மற்றும் இதர காரணிகள் அனைத்தும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாற்பது தினங்களுக்கு பொருளாதார செயற்பாடுகள் மந்தமடைந்திருந்தன.

காலாண்டு காலப்பகுதி முழுவதிலும், மேலே தெரிவிக்கப்பட்டதைப் போன்று, மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் தாமதங்கள் போன்றன நிலவியதுடன், விநியோகப் பகுதிகள் மூடப்பட்டமை, கப்பல் போக்குவரத்தில் வீழ்ச்சி காணப்பட்டமை மற்றும் இதர விநியோகத் தொடர் சவால்கள் போன்றனவும் காணப்பட்டன.  எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சரக்குக் கப்பல்கள் காணப்படாமை போன்ற காரணங்களால், குறுகிய காலப்பகுதியில் உள்வரும் சரக்குச் செலவீனம் 300 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. மேலும், முன்னர் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட வங்கிகளில் LCகளை ஆரம்பிப்பதில் பல வார காலப்பகுதிக்கு தாமதங்கள் நிலவியதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

விநியோகத்தை விட அதிகமான கேள்வியின் காரணமாக, நிலக்கரியின் விலையுடன், க்ளின்கரின் விலையும் தொடர்ந்து அதிகரித்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாயின் பெறுமதியும் அதிகளவு வீழ்ச்சியடைந்திருந்தது. இதனூடாக, க்ளின்கர் மற்றும் பொதிகளுக்கான கடதாசி அடங்கலாக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலைகளில் பெருமளவு அதிகரிப்பு ஏற்படக் காரணமாக அமைந்திருந்தது.

நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, சீமெந்து இறக்குமதியாளர்கள் இறக்குமதியை பெருமளவு குறைத்துள்ளனர். இதனால் சந்தையில் சீமெந்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சந்தையில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில், டோக்கியோ சீமெந்து தனது வினைத்திறனை மேம்படுத்தியிருந்ததுடன், உள்நாட்டு உற்பத்திப் பகுதியொன்றை நிறுவி, கேள்வியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

காலாண்டின் நிறைவில் உற்பத்தியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான வகையில் பல்வேறு காரணங்களினால் சந்தையில் சீமெந்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. தொற்றுப்பரவலுடனான பிரயாணக் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதியின்மை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு தொழிற்சாலைகள் மற்றும் களஞ்சியசாலைகளிலிருந்து பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் சந்தைச் செயற்பாடு மேலும் குறைந்திருந்தது. பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனையாளர்கள் அதிகளவு கையிருப்பை கொண்டிருப்பதில் அதிக ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏனைய நிர்மாண மூலப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் சீமெந்தின் மீது அதியுயர் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, அவர்களின் பணப்பாய்ச்சலை சீமெந்தில் பிரயோகிப்பதற்கு அவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X