2025 ஜூலை 30, புதன்கிழமை

திண்மக் கழிவு பிரச்சினைக்குத் தீர்வு

Gavitha   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித் 

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று - கொடுவாமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் ரங் லாய் மார்கூ மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 2012 - 2017 ஆகிய 5 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தினை உருவாக்கும் வகையில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  

UNOPS நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்துக்கு 275 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  

இந்நிகழ்வில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் டங் லாய் மார்கூ (Tung- Lai Margue) ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிரி மௌலானா, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், மாகாண சபை உறுப்பினர்களான
ஆர்.துரைரெட்ணம், கோ.கருணாகரம், (ஜனா), இ. நித்தியானந்தம், மா.நடராசா, ஜீ.கிருஸ்ணப்பிள்ளை, சிப்லி பாருக், உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையளார் எம். உதயகுமார், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இத்திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தில் உள்ளூராட்சி சபையின் திண்மக்கழிவுகளை முகாமைத்துவம் செய்து பசளை தயாரித்தல் மற்றும் வேறு உற்பத்திகளுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

அத்துடன், UNOPS நிறுவனத்தின் திட்டத்தின் மூலம் திண்மக்கழிவுகளில் இருந்து பசளை தயாரித்தல் தொழில்நுட்பங்கள், நிலைபேறான பசளைத் தயாரித்தலின் வியாபாரத் திட்டமிடல்கள், வெற்றிகரமான திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டங்களின் அனுபவப்பகிர்வுகள், ஆய்வுகளின் முடிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்படுத்துதல், நிறுவன ரீதியான திட்டமிடலும் திண்மக் கழிவுகளால் பசளை தயாரிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சீர் செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திண்மக்கழிவுகள் மூலம் பசளை தயாரிக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  

கொடுவாமடுவுக்கு மேலதிகமாக இதற்கான நிலையங்களாக களுதாவளை, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு மற்றும் ஓட்டமாவடி ஆகிய இடங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

இவற்றில் கொடுவாமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் கையளிக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் தவிர்ந்து ஏனைய நிலையங்கள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளூராட்சி நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 5 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் UNOPS நிறுவனத்தினால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இத்திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்களில் கிராமங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை முகாமைத்துவம் செய்து சேதனப்பசளை தயாரித்து விற்பனை செய்யும் முறைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கு வருமானமீட்டக்கூடிய சந்தர்ப்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்தத் திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் 4 இலட்சம் மக்கள் பயன்பெறவுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .