Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச.சேகர்
தங்கம், தங்க ஆபரணங்கள் என்பது தமிழர்களின் பாரம்பரிய முதலீடுகளில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், தமிழர் திருமணங்களில் தாலியில் சேர்க்கும் மாங்கல்யம் அடங்கலாக, வளையல்கள், தோடுகள், மோதிரங்கள், கைச் சங்கிலிகள், கழுத்துச் சங்கிலிகள் என பல ஆபரணங்களில் தங்கம் பிரதான அங்கம். அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் என்னவோ, நம்மவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களை செல்லமாக அழைக்கும் போது, “என் தங்கமே, என் செல்லமே” எனக் குறிப்பிடுவதுமுண்டு. அண்மையில் கூட அவ்வாறு அரசியலில் பிரவேசித்த ஒருவரால் அவருக்கு நெருக்கமான ஒருவரை இவ்வாறு அழைத்து பிரபல்யம் பெற்ற “தங்கத்தை” பலரும் அறிந்திருப்பர். அத்துடன், தங்கத்தை ஒப்பிட்டு பல சினிமா பாடல்கள் கூட எழுதப்பட்டுள்ளன. அண்மையில் வெளியாகிய “தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே...” எனும் அனிருத் பாடல் கூட தற்போதைய தங்க விலையின் சூழலுக்கு சற்று பொருத்தமற்றதாகவே உள்ளது. ஏனெனில் தங்கம் வாங்க வருபவர்கள் விலையை அறிந்து கொண்டு, ஓடிச் செல்லும் ஒரு சூழல் தான் ஏற்பட்டுள்ளது.
சரி, 2024 ஜனவரி மாதத்தில் 24 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் ரூ. 182,000 ஆகவும், 22 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 166,000 ஆகவும் காணப்பட்ட நிலையில், 2025 ஜனவரி மாத இறுதியில் அந்த விலை 24 கெரட் ஒரு பவுணுக்கு ரூ. 215,000 ஆகவும், 22 கெரட் ஒரு பவுணுக்கு ரூ. 196,000 ஆகவும் காணப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் இந்த விலை அதிகரிப்பு சடுதியாக உயர்ந்து, நேற்றைய தின (16) சந்தை நிலைவரங்களின் படி, 22 கெரட் ஒரு பவுண் விலை சுமார் ரூ. 380,000 ஆகவும், 24 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் ரூ. 410,000 ஆகவும் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பு 60 சதவீதத்திற்கும் மேற்பட்டதாக பதிவாகியுள்ளது.
இவ்வார இறுதியில் அல்லது அடுத்த வார முற்பகுதியில் 22 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 400,000 ஐ தொடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு, இலங்கையில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. உலக நாடுகளில் பெரும்பாலும் தமிழர்கள் செறிந்து வசிக்கும் நாடுகள் தவிர்ந்த இதர நாடுகளில் தங்கம் ஒரு முதலீட்டு மூலமாக மாத்திரமே பார்க்கப்படுகிறது. தமிழர்களுக்கு மட்டுமே, தங்கம் சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணைந்த ஒரு அங்கமாக அமைந்துள்ளது. எதிர்வரும் திருமண வைபவங்களுக்கு தயாராபவர்களுக்கு இந்த விலை அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் குறிப்பாக தாலியில் சேர்க்கும் மாங்கல்யம் என்பதை திருமணம் நெருங்கி வரும் காலப்பகுதியில் தான் பெரும்பாலானோர் செய்வதுண்டு. அதற்காக பொன்னுருக்கு போன்ற சடங்குகளும் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க, இந்த விலை அதிகரிப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை எடுத்துப்பார்த்தால், தங்கத்தின் விலைக்கும், அமெரிக்க டொலரின் பெறுமதிக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு. வரலாற்று ரீதியாக எடுத்துப்பார்த்தால், இதற்கு முன்னர் தங்கத்தின் விலை இது போன்று சடுதியாக எகிறிய சமீபத்திய காலமாக 1979 – 1980 காலப்பகுதியைக் குறிப்பிடலாம். சர்வதேச ரீதியில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதன் காரணமாக, தங்கத்தின் விலை பெருமளவு அதிகரித்திருந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 226 டொலரிலிருந்து 850 டொலர் வரை அதிகரித்திருந்தது. ஈரானில் ஏற்பட்ட புரட்சி, எரிபொருள் நெருக்கடி நிலை, ஆப்கானிஸ்தான் மீது சோவியட் நாடுகளின் படையெடுப்பு, உலக நாடுகளின் பணவீக்க நிலை போன்ற காரணிகளால் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியிருந்தது. ஆனாலும், இந்த விலை அதிகரிப்பு நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. 1980 ஜனவரியில் 850 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 1980 ஏப்ரல் மாதத்தில் 485 அமெரிக்க டொலர்களாக குறைந்தது. அவ்வாறு தளம்பல்களுடன், 1982 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் 297 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தது. எனவே, இந்த விலை சீராக்கத்திற்கு சுமார் இரண்டு வருட காலப்பகுதி எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் அமெரிக்காவின் பெடரல் வங்கியின் தலைவராக செயலாற்றிய போல் வோல்கர் மேற்கொண்ட அதிர்ச்சி தரும் தீர்மானங்களினால் இது சாத்தியமாகியிருந்தது. குறிப்பாக, வங்கிகளின் வட்டி வீதங்களை அவர் உயர்த்தியதுடன், இந்த விலை வீழ்ச்சியும் பதிவாக ஆரம்பித்தது. "வோல்கர் ஷொக்" எனவும் இந்த நடவடிக்கை அக்காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது.
தற்போதைய சூழலுக்கு வந்தால், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மேற்கொண்ட சர்வதேச நாடுகளுக்கான வரி விதிப்புடன் ஆரம்பித்த பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலால், அமெரிக்க டொலரினாலான பிணை முறிகளிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி, தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதுடன், தங்கத்தை கொள்வனவு செய்து, தம் நாடுகளின் சொத்து இருப்புகளை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இதனால் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. மேலும், ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல், அமெரிக்க டொலரின் மதிப்பு சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதங்களை குறைத்துள்ளமையும், தங்கத்தின் விலை உயர்வில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வங்கி வட்டி வீதங்களில் அதிகரிப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் தான் தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படும். அந்தத் தீர்மானமும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் வசம் தான் உள்ளது.
சரி, பல வருடங்களுக்கு முன் தங்கத்தை கொள்வனவு செய்து அல்லது அதில் முதலீடு செய்து வைத்திருப்பவர்கள், தற்போது நிலவும் உயர்ந்த விலைகளுடனான சூழலில் அவற்றை விற்று இலாபமீட்டலாமா, இன்னமும் தங்கத்தின் விலை அதிகரிக்குமா என்பது பற்றி வினாவுதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீதங்கள் தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி, வட்டி வீதங்கள் அதிகரிப்பது தொடர்பில் ஏதேனும் தீர்மானம் மேற்கொள்ளப்படும் வரையில் இந்த தங்கத்தின் விலை உயர்ந்து தான் செல்லும். குறிப்பாக, இந்த வருட இறுதி வரையேனும் இந்த அதிகரிப்பை அவதானிக்க முடியும். “பொறுத்தார் பூமி ஆழ்வார்” எனும் பழமொழிக்கமைய, சற்று பொறுத்து, இன்னமும் விலை உயரும் போது, இலாபமீட்டுவது உசிதம்.
தற்போதைய விலை அதிகரித்துச் செல்லும் சூழலில், தங்கம் வாங்கலாமா எனக் கேட்டால், குறுகிய கால அடிப்படையில் இலாபமளிக்கக்கூடிய மாற்று முதலீட்டுத் திட்டங்களை நாடுவது உகந்தது என்றே குறிப்பிடலாம்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago