2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொங்கி நிற்கும் பொருளாதார இலக்குகள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ‘ Vision 2025’ இலக்குகளை, இன்று நினைவில் வைத்திருக்கிறோமா ? 

2020இல் அடையக்கூடிய இலக்குகள் என, 2015இல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும், இடைநடுவே ஏற்பட்ட அதிகார மோதலின் காரணமாக, இவை அனைத்துமே, 2025ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டு இருந்தன.  

தற்போது, 2020இல் யாருமே எதிர்பாராத வண்ணம், அன்று எதிர்த்தரப்பில் இருந்தவர்கள், ஆளும் தரப்பாக மாறியிருக்கிறார்கள். அதுமட்டுமா ? மூன்றில் இரண்டு என்கிற அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, நீண்டகால அடிப்படையில் திட்டமிடப்பட்ட நாட்டின் பொருளாதார இலக்குகளும் அபிவிருத்தித் திட்டங்களும் என்ன ஆகுமென, நாம் நினைத்து பார்த்தது உண்டா ?  

தொடர்ச்சியாகப் பொருளாதாரம் தொடர்பான எதிர்வினைச் செய்திகள், இலங்கை அரசின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் திட்டங்களையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.  

2025ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட இலக்குகளில் முதன்மைக் குறிக்கோள், ‘இலங்கையைச் செல்வந்த நாடாக மாற்றியமைப்பதன் மூலம், இந்து சமுத்திரத்தின் மய்யமாக மீள உருவாக்குவதுடன், இதை அடிப்படையாகக்கொண்டு, அறிவுசார் ரீதியில் போட்டித்தன்மைமிக்க சமூக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்’ என்பதாகும்.

இந்தப் பரந்த குறிக்கோளுக்குள் பல்வேறு சிறிய, வாக்குறுதி அளிக்கப்பட்ட இலக்குகள் உள்ளடங்கி இருக்கின்றன.  

இலக்குகள் எதை நோக்கியனவாக இருக்கின்றன? 

2025ஆம் ஆண்டை நோக்கியதாக, அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்குகள், சரியான திட்டமிடல்கள் இல்லாத வாக்குறுதிகள் என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவை, கடதாசியில் வெறுமனே, கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த இலக்கை அடைந்துக்கொள்ள, மிக நீண்டகாலம் இருக்கின்ற போதிலும், அதை அடைவதில், அரசாங்கத்தின் திட்டமிடல் என்பது பூச்சிய நிலையிலேயே இருக்கிறது.

தற்போதைய புதிய அரசாங்கம், தனக்கெனப் புதிய திட்டங்களைக் கொண்டுவந்து, நடைமுறையிலிருக்கும் திட்டங்களை இல்லாமல் செய்கின்ற நிலையில் இல்லை. காரணம், அதற்கு இலங்கையின் பொருளாதார நிலை இடம் கொடுக்காது. கூடவே, கொரோனா வைரஸின் பாதிப்பும் இலங்கையின் பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது.

அத்துடன், இந்த அரசாங்கம் நம்பியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதே திட்டங்களைப் புதிய பெயர்களுடன் நடைமுறைப்படுத்தப்படுமே தவிர, மிகப்பெரிய அளவிலான புதிய திட்டங்களையோ, மறுசீரமைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. 

2025ஆம் ஆண்டில் அடையப்படக்கூடிய, பட்டியல்படுத்தப்பட்ட இலக்குகளான வெளிநாட்டு நேரடி முதலீடு, ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை வருமானம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்பவை தொடர்பான இலக்குகள், அடையமுடியாத இலக்குகளாகவே, தற்போதைய நிலையில் இருக்கின்றன.

இதற்கு, 2020இல் உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு காரணமெனினும் 2019இல் நம்மைப் பாதித்த ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளும் அதன் தொடர்ச்சியும் இன்னோர் காரணியாக இருக்கிறது. 

2025ஆம் ஆண்டை நோக்கிய முக்கிய இலக்குகளில் ஒன்று, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கணிசமான அளவில் அதிகரிப்பதாகும். பொதுவாகவே, ஒரு நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பதன் மூலமாக, ஏற்றுமதியை ஊக்குவிக்க முடிவதுடன், சென்மதி நிலுவையைச் சீர்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்தப் பிரதான இலக்கை அடைவதன் மூலமாக, உப-இலக்குகளை அடைவதற்கு சாதகமான வழிமுறைகள் உருவாகும்.  

ஆனால், இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான பிரதான இலக்கே, இன்றைய நிலையில், எப்படி அடைய முடியும் என்கிற கேள்வி, எல்லோரிடமும் எழுந்திருக்கிறது. இந்த இலக்குகளின் பிரகாரம், 2020ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு நேரடி முதலீடு, சுமார் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்ட வேண்டும். இது எந்தவகையிலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல.

இலங்கையில் போர்முடிவுக்கு வந்த காலப்பகுதியான 2010-2014இலும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த 2015-2016 வரையான காலப்பகுதியிலுமே, நம் நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு சராசரியாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்கிறது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு நேரடி முதலீட்டின் அளவைச் சரியாகக் கணிப்பிடுவோமாயின் அது, 700மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே இருந்திருக்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4-6 மாதங்களுக்கு மேலாக, எந்தவிதமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் கொண்டிராத நாம், எப்படி இதையடைந்து கொள்ள முடியும்? எனவே, இந்த இலக்குகள் மறுசீரமைக்கப்படுவதைத் தவிர, வேறு எந்தவிதமான தீர்வையும் காண முடியாது.  

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடல் குழு, குறைந்தது 2020ஆம் ஆண்டில் பாதீட்டில் தூண்டுவிழும் தொகையைக் குறைக்கக் கூடிய அளவுக்கோ, புதிய அரசாங்கத்தின்பால் நம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் மூலமாக சீனா மட்டுமின்றி, ஏனைய நாடுகளின் முதலீடுகளையும் ஈர்க்க கூடிய திட்டங்களை வகுக்குமாயின், அது இன்றைய சூழலை அடிப்படையாகக்கொண்டு அடையப்படக் கூடியதும், நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் இருக்கும் எனக் கூறமுடியும்.  

இலங்கையின் ஏற்றுமதிகளில் சாதகமானநிலைமை தென்படும் சமயத்தில் 2025ம் ஆண்டுக்கான இலக்குகளில் ஏற்றுமதி தொடர்பிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தற்போதுஇ சராசரியாக 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அண்மையாகவுள்ள ஏற்றுமதிகளை இரண்டு மடங்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றவேண்டும் என இலக்கிடப்பட்டு உள்ளது.

இந்த இலக்கை அடைவது, ஒன்றும் இலகுவானதல்ல. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம், ஒட்டுமொத்த இலங்கைக்கும் சம அடிப்படையில் வளங்களைப் பங்கீடு செய்கின்றபோது, இந்த இலக்கை அடைய முடியும். பாதீடுகளில், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை, வெறுமனே கடதாசியில் கொண்டிருக்காமல், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலமாக, புதிய வருமானங்களை உறுதி செய்ய முடியும். ஆனால், இந்த அரசாங்கம் இவற்றைச் செய்வதற்கு முன்னிற்குமா, என்கிற கேள்வியில்லாமல் இல்லை. 

அத்துடன், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் என்பது, மறைமுகமாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டுவருகின்ற உத்தியாகும். இதற்கு, ஏற்றுமதியில் பல்வகைமைத் தன்மையை பேணுதல் அவசியமாகும். காரணம், இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பெருமளவிலான வருமானம், விவசாயத்துறை சார்ந்த ஏற்றுமதி மூலமாகவே வருகின்றது. அதிலும், சில குறிப்பிட்ட உற்பத்தி பொருள்களில்தான் இந்த ஏற்றுமதியும் தங்கியுள்ளது.

எனவே, இரட்டிப்பு வருமானம் என்கிற திட்டமிடலைக் கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்துக்கும் சேர்த்து, இந்தச் சிறிய ஏற்றுமதி வட்டத்துக்குள் தங்கியிருப்பது என்பது நடைமுறைக்கு ஒப்பானதல்ல. எனவே, ஏற்றுமதியில் பல்வகைத்தன்மையை, இலங்கை அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டுவருவதும் அவசியமாகிறது. 

இலங்கையைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குழப்பமான பொருளாதாரக் கொள்கைகளை வைத்துக்கொண்டு, முதலீட்டாளர்களைக் கவருதல் கடினமானதாகும். எனவே, திட்டமிடல்கள் மட்டுமின்றி, அவற்றை நடைமுறைபடுத்துவது தொடர்பிலும் சிந்திப்பது அவசியமாகிறது. எனவே, 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகளை அடைய, ஏற்றுமதி தொடர்பிலும் நிதிக் கொள்கைகள் தொடர்பிலும் நிறையவே மாற்றங்களைச் செய்யவேண்டியதாக இருக்கிறது. 

கடந்த காலத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2025ஆம் ஆண்டுக்கான, இலங்கையின் இலக்கு திட்டமிடப்பட்டு இருந்தாலும், நடைமுறை அதற்கு நேரெதிராகவே இருக்கிறது. 2017ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும், இலங்கை அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை மூலமான வருமானம், இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமாகும்.

கடந்த இரண்டரை வருடங்களில், இலங்கைக்குள் வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் வருமானமும் அதிகரித்திருந்த போதிலும், 2019/20 ஆண்டுகளில் மீளவும் பூச்சிய நிலைக்கே சென்று விட்டோம் என்பதே உண்மையாக இருக்கிறது.

வர்த்தக சம்மேளனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பிலான கணிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளன எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலா பயணிகளுக்கான உபசரிப்பு வர்த்தகமும் சிக்கலை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா விடுதிகளின் தரம், போதுமானதாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாதபட்சத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மட்டுமல்ல, வருமானத்திலும் அதிரிப்பை ஏற்படுத்த முடியாது.  நிலைமைகள் சீரடைந்து, சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருகின்றபோது, மேற்கூறிய உட்கட்டமைப்பு வசதிகளில் மாற்றம் அவசியமானது. இல்லையெனில், நாட்டின் பொருளாதாரம் மிகப்பாரிய பாதிப்பைச் சந்திக்கும். 

இன்றைய நிலையில் இலங்கைக்குத் தேவையானது, பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவானதும் நிலையானதுமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாகும். இதன்போது, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் கூடிய கொள்கைகளை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்.

2025ஆம் ஆண்டை நோக்கிய இலக்குகளிலும் இது சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அதில், ‘இலங்கை அரசாங்கம் தான் உருவாக்கும் கொள்கைகள், திட்டங்கள் என்பவற்றைத் திறன்மிகு வகையில் நடைமுறைப்படுத்தாதன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது. எனவே, இந்த இலக்குகளை அடைய ஸ்திரமான ஒருங்கிணைப்பும் கட்டுப்பாடுகளும் கொண்ட நடைமுறைபடுத்தல் அவசியம் என்பதனை இவ்வரசு உணர்ந்துள்ளது’ என குறிப்பிட்டிருப்பது வேடிக்கையானது.  

எனவே, இந்த உண்மைகளை உணர்ந்துகொண்டு, தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், மக்களின் விரக்தியையே அவர்கள் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

இல்லாவிடின், நாட்டின் அபிவிருத்தி என்பது 10 வருடங்கள் தாண்டியும் அதே நிலையில்தான் இருக்குமென்பதே உண்மை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .