2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாதிப்படையக்கூடிய நிலையில் பூகோள பொருளாதாரம்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 25 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூகோளப் பொருளாதாரமானது அதிகமாகப் பாதிப்படையக்கூடிய நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதுடன், விரைவான அவசரகாலத் திட்டத்துக்கு தயாராகுமாறு ஐக்கிய அமெரிக்காவையும் ஏனையபெரிய நாடுகளையும் கேட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்து வரும் பங்குச் சந்தைகள், அதிகளவு மாற்றமடைகின்ற நாணயங்கள், பொருளாதார பலவீனத்துக்கான அறிகுறிகளுக்கு மத்தியில், இவ்வார இறுதியில் சீனாவின் ஷங்காய் நகரில், உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களையுடைய ஜி-இருபது நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் சந்தித்துக்கொள்கையில், அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வீழ்ச்சியடைந்து வரும் எண்ணெய் விலைகள், சீனா, ஏனைய வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் குறைவடையும் வளர்ச்சி வாய்ப்புக்கள் காரணமாக, பலவீனமாகவுள்ள பூகோள ரீதியிலான மீட்சி, மேலும் மோசமடைந்து வருவதாக சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அரச முதலீடுகளை அதிகரிப்பதற்கு ஏதுவாகவுள்ள நிதி தொடர்பான இடைவெளியை பயன்படுத்தி, ஒன்றிணைந்த தேவை உதவிக்கு ஜி-20 கட்டாயம் திட்டமிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் பணியாளர் ஒருவர், அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தவிர, பொருளாதார வளர்ச்சியானது தொடர்ச்சியாக வீழ்ச்சியடையுமாயின், மேலதிக அளவீடுகளை ஜி-20 நாடுகள் விருத்தி செய்யவேண்டும் எனவும் அவற்றை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், சர்வதேச நாணயநிதியமானது, 2016, 2017ஆம் ஆண்டுக்கான பூகோள ரீதியிலான பொருளாதார வளர்ச்சியை 0.2 சதவீதத்தால் குறைத்திருந்தது. அந்தவகையில், இவ்வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சியானது 3.4 சதவீதமாக இருப்பதோடு, எதிர்வரும் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி சதவீதமானது 3.6 ஆகவும் உள்ளது. எனினும் புதிய அறிக்கையின்படி, சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த அறிக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளநிலையில், அந்நேரம் பொருளாதார வளர்ச்சி வீதமானது மேலும் குறைவடையும் எனக் கூறப்படுகிறது.

சிரிய அகதி நெருக்கடியாலும் சீகா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள், மற்றையவர்களுக்காக பாரத்தைச் சுமப்பதாகவும் அவற்றுக்கு ஒருங்கிணைந்த பூகோள முன்னெடுப்பின் மூலம் உதவியளிக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X