Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 01 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சகல மதத்தவர்களும் குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் யாத்திரை செல்லும் பகுதிகளில் ஒன்றாக சிவனொளிபாத மலை அமைந்துள்ளது.
இந்த மலை தமிழ் மொழியில் சிவனொளிபாத மலை என அழைக்கப்படுவதுடன், சிங்கள மொழியில் ஸ்ரீ பாத எனவும், ஆங்கில மொழியில் அடம்ஸ் பீக் (Adams Peak) என்றழைக்கப்படுவதும் நாம் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த வாரம் இந்த சிவனொளிபாத மலையை அண்மித்த பகுதியில் தங்கும் (விடுதி) ஹொட்டல் ஒன்றில், வெளிநாட்டு முதலீட்டாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்து ஒரு சில தரப்பினர் சமூக வலைத்தளங்களில் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதன் போது அவர்கள் முன்வைத்திருந்த வாதமாக, சிவனொளிபாத மலை சிங்களவர்களுக்கு சொந்தமானது, அங்கு வேற்று நாட்டவர்கள் உரிமை கோர முடியாது என்பதுடன், குறித்த காணி விவகாரத்துடன் மத்திய கிழக்கு நாட்டு தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரான எடிசலாட் நிறுவனத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த நிறுவனத்தின் சேவைகளைப் பகிஷ்கரிக்குமாறும், அந்நிறுவனத்தின் சிம் அட்டைகளை உடைத்தெறியும் விதமான வீடியோக்காட்சிகளும் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியிருந்தன.
குறித்த எடிசலாட் வர்த்தக நாமம் சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்தித் தனது வர்த்தக நாமத்தையும், சேவைகளையும் இலங்கையர்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்கு கடந்த பல ஆண்டுகளாகப் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இலங்கையில் 25 வருடங்களுக்கு மேலாக இயங்கும் வலையமைப்பின் உரிமையைக் கொண்டுள்ள எடிசலாட், அலைபேசிச் சேவைகளை இலங்கையில் அறிமுகம் செய்திருந்த செல்டெல் நிறுவனத்தின் பிந்திய உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, நிறுவனங்கள் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு தமது கீர்த்தி நாமத்தையும், சேவைகள் விநியோகத்தையும் சமூக ஊடகங்களினூடாக முன்னெடுத்து வரும் நிலையில், இவ்வாறான ஆதாரமற்றப் பதிவுகளின் காரணமாக, இரு இனங்களுக்கிடையிலான வேறுபாட்டை ஏற்படுத்தி காண்பிக்குமளவுக்கு குறித்த பதிவாளர்கள் இயங்கியிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் எடிசலாட் நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி கோரியிருந்த போது, அந்நிறுவனத்தின் ஊடக இணைப்பு முகவர் நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம், குறித்த காணி அல்லது நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் ஹொட்டல் / தங்கும் விடுதிக்கும் எடிசலாட் நிறுவனத்துக்கும் துளியளவேனும் சம்பந்தம் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்ததாவது, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து குறித்த காணியைக் கொள்வனவு செய்ததாகக் கருதப்படும் சுயாதீன முதலீட்டாளர்கள் குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
இந்தக்குழு குறித்த பிரதேசத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தொலைத்தொடர்பாடல்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்காக எடிசலாட் லங்காவிடம் கோரிக்கை மேற்கொள்வே, சிவனொளிபாத மலையிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் தற்காலிக வலையமைப்பு கோபுரம் ஒன்றை நிறுவி அதனூடாக அவர்களுக்கு தொலைத்தொடர்பாடல்கள் சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே எடிசலாட் மேற்கொண்டிருந்ததாகவும், இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொறியியலாளர்கள் குழுவினரும் குறித்த பகுதிக்கு அந்த வெளிநாட்டு சுயாதீன முதலீட்டாளர்களுடன் விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தது.
குறித்த விஜயத்தின் போது மஸ்கெலியாவில் தற்காலிக தொலைத்தொடர்பாடல் கோபுரம் ஒன்றை நிறுவுவது பற்றியே குறித்த எடிசலாட் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், குறித்த பிரதேசத்தில் வலையமைப்புக்கானத் தேவை காணப்படாத விடத்து, அல்லது அரச அதிகார அமைப்புகள் கோரும் பட்சத்தில் குறித்த தற்காலிக வலையமைப்பு கோபுரத்தை அகற்றுவதற்கும் தயாராகவுள்ளதாகவும் தெரிய வந்தது.
குறித்த வெளிநாட்டு சுயாதீன முதலீட்டாளர்களுக்கும், எடிசலாட் நிறுவனத்துக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என தெரிவித்திருந்த குறித்த ஊடக இணைப்பு முகவர் நிறுவனம், எடிசலாட் லங்காவில் பணியாற்றும் எந்தவொரு ஊழியர்களுக்கு அல்லது நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் திட்டத்துடன் எவ்வித நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த எடிசலாட் நிறுவனத்துக்கெதிரான ஆதாரமற்ற பிரசார செயற்பாடுகளின் காரணமாக எடிசலாட் நிறுவனத்துக்கு எந்தளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி உடனடியாகத் தெரிவிக்க முடியாத போதிலும், அவ்வாறான இழப்புகள் ஏதும் ஏற்படாமலில்லை எனவும் குறித்த தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இந்த அவதூறான பிரசார செயற்பாடுகளைப் போட்டியான இதர நிறுவனங்களின் தூண்டுதலில் முன்னெடுக்கப்பட்டிருக்க முடியாது எனவும், இலங்கையில் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்கும் நிறுவனங்கள் மத்தியில் ஆரோக்கியமானப் போட்டிகரத்தன்மை காணப்படுவதாகவும் கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.
பொது மக்கள் மத்தியில் வெவ்வேறு சேவை வழங்கல்கள் மூலமாக முன்னிலையான சேவை வழங்குநராக தன்னை உயர்த்திக்கொள்ளும் நோக்குடன் வெவ்வேறு சமூகப்பொறுப்புணர்வு வாய்ந்த சேவைகளையும் முன்னெடுத்து வரும் ஒர் தனியார் நிறுவனத்துக்கு எதிராக ஒரு சில அடையாளம் காண்பிக்கப்படாத சக்திகளால் முன்னெடுக்கப்படும் இந்த அவதூறான பிரச்சார செயற்பாடுகளால் ஒரு நிறுவனத்தின் நற்பெயர் எந்தளவு தூரத்துக்குப் பாதிக்கப்படுகின்றது என்பதற்கு உதாரணமாக அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இதுவும் ஒன்று.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறித்த நிறுவனங்கள் மௌனம் காக்காமல், தமது நிலைப்பாட்டை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் வெளிப்படுத்துவதன் மூலமாக அந்நிறுவனங்களின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய களங்கங்களைப் பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .