2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீளக்குடியேற்றப்பட்ட சிறுவர்களுக்கு ஜப்பான் ஆதரவு

S.Sekar   / 2022 ஜனவரி 10 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தைச் சேர்ந்த மீளக்குடியேற்றப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை கட்டடங்களை நிர்மாணிக்கும் திட்டத்துக்காக ஜப்பானிய அரசாங்கம் மொத்தமாக 88,819 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக 17.6 மில்லியன் ரூபாய்) வழங்க முன்வந்துள்ளது. தனது Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) திட்டத்தினூடாக இந்த உதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. இந்த நன்கொடை வழங்கலுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் இடம்பெற்றதுடன், இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் மனிதநேய அபிவிருத்தி அமைப்பின் (HDO) நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஜேசுராசா அமிர்தராஜ் ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

வட மாகாணத்தில் புனருத்தாரண நிகழ்ச்சிகளை மனிதநேய அபிவிருத்தி அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. இந்தத் திட்டத்தினூடாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசத்தில் ஸ்கந்தபுரம் இல – 2 அ.த.க. பாடசாலையில் இரண்டு கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும், அதனூடாக அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு சௌகரியமாக தமது கல்வியைத் தொடரக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இந்தப் பாடசாலையில் தரம் 1 முதல் 11 வரை சுமார் 248 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆனாலும் போதியளவு வகுப்பறை இடவசதிகள் இன்மை காரணமாக சில வகுப்புகள் வெளிப் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய கட்டடங்களினூடாக, மீளக்குடியேற்றப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பான வகுப்பறைகள் மற்றும் நூலக வசதிகளை இந்தப் புதிய கட்டடங்கள் வழங்கும் என்பதுடன், விசேட தேவைகளைக் கொண்ட கல்வி அலகுக்காக பிரத்தியேகமான வகுப்பறையை கொண்டிருக்கும்.

இந்த நன்கொடை தொடர்பில் அமிர்தராஜ் கருத்துத் தெரிவிக்கையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த பாடசாலை அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இடம்பெயர்ந்திருந்த மக்கள் தமது பகுதிகளுக்கு மீளத்திரும்ப ஆரம்பித்தனர். பல திறமையான மாணவர்கள் காணப்பட்ட போதிலும், போதியளவு வகுப்பறை வசதிகள் இன்மையால், சில மாணவர்களுக்கு மரங்களுக்கு கீழ் இருந்து பயில வேண்டிய நிலை காணப்படுகின்றது. மழை அல்லது கடும் வெய்யில் காலப்பகுதியில் இது மிகவும் கடினமான காரியமாக அமைந்துள்ளது. யுத்தம் காரணமாக விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களும் காணப்படுகின்றனர்.  அவர்களுக்கு விசேட வகுப்பறை வசதிகள் தேவைப்படுகின்றன. இந்தத் திட்டத்தினூடாக அவர்களுக்கு அந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை எம்மால் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், போதியளவு வகுப்பறை வசதிகள் இன்மையால் அனுமதி மறுக்கப்பட்ட பல மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஸ்கந்தபுரம் இல – 2 அ.த.க. பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், சூழவுள்ள கிராமத்தார், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என அனைவரும் ஜப்பானிய அரசாங்கத்தின் இந்த நன்கொடை உதவியையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X