2024 மே 02, வியாழக்கிழமை

வங்கி வட்டி வீதங்கள் குறைவால் மாற்று முதலீடுகளை நாடும் மக்கள்

S.Sekar   / 2024 மார்ச் 29 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

இலங்கை மத்திய வங்கியினால் நாணயக் கொள்கைகள் மீளாய்வு செய்யப்படும் நிலையில், அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளின் போது வைப்புகளுக்கான மற்றும் கடன் வழங்கலுக்கான வட்டி வீதங்களை தொடர்ந்தும் குறைப்பது பற்றி தீர்மானித்து அறிவித்திருந்தது.

இவ்வாரம் வெளியிடப்பட்ட தீர்மானத்தின் போதும் இந்த இரு வட்டி வீதங்களும் முறையே 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைத்துள்ளது. அதன் பிரகாரம் வைப்பு வீதம் 8.50 சதவீதமாக மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

இதனால் வங்கிகளில் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்கள் கடந்த ஆண்டில் காணப்பட்ட இரட்டை இலக்கப் பெறுமதிகளிலிருந்து ஒற்றை இலக்கப் பெறுமதிகளுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன. இந்நிலையில், மக்கள் தம் கொண்டுள்ள நிதியை நிலையான வைப்புகளிலிருந்து மீளப் பெற்று மாற்று முதலீட்டுத் திட்டங்களில் வைப்புச் செய்வதற்கு தூண்டப்படுகின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை தரவுகளின் பிரகாரம் நாட்டில் பணவீக்கத்தை 5 சதவீதமாக பேணும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாகவும், தெரிவிக்கப்படுகின்ற போதிலும், வங்கிகளில் கடன்களுக்கான வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றன. குறிப்பாக தனிநபர் கடன்களை எடுத்துக் கொண்டால் 14 – 17 சதவீதம் வரையில் வங்கிகளில் வழங்கப்படுகின்றன. சில வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் 35 – 40 சதவீதம் வரையிலும் கடன் வசதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சந்தையில் ஒழுங்குபடுத்தல் சீராக கண்காணிக்கப்படாத ஒரு சூழலில், புதிதாக பல முதலீட்டுத் திட்டங்கள் முளைவிட்டுள்ளன. சாதாரணமாக, இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சூழலில் இவ்வாறான அனுமதி பெறாத, பதிவு செய்யப்படாத கவர்ச்சிகரமான அனுகூலங்களை வழங்கும் வாக்குறுதிகளுடன் மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை கொண்டு செல்லும் திட்டங்கள் தோன்றுவது வழமை. இவை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் இரு மடங்கு வீழ்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், பொது மக்களும் தாம் உழைத்த பணத்துக்கு உயர்ந்த பலனை பெற்றுக் கொள்ளவே எதிர்பார்க்கின்றனர். மாறாக, வங்கிக் கட்டமைப்புகளில் அவர்கள் மேற்கொள்ளும் வைப்புகளுக்கு கிடைக்கும் வட்டியின் மீது வரி அறவிடப்படுவதாலும் அவர்களின் முதல் மீதான உழைப்பு வீழ்ச்சியடைகின்றது.

இந்நிலையில், மரச் செய்கைகளில் முதலீடு, ஆட்களை சேர்க்கும் பிரமிட் திட்டங்கள் போன்றவற்றில் மக்கள் தமது அறியாமையினால் நாட்டம் கொள்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், மக்களின் வைப்புகளையும், முதலீடுகளையும் கவர்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட, அங்கிகாரம் பெற்ற நிறுவனங்கள் முறையான திட்டங்களை வழங்க வேண்டியது பொருத்தமானதாக அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .