2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இந்து ஆலயங்களின் புனரமைப்பிற்கு 7.8 மில்லியன் நிதி

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களைப் புனரமைப்பதற்காக இந்து கலாசார அமைச்சினால் 7.8 மில்லியன் ரூபா நிதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக புனரமைப்புப் பணிகளினை நிறைவு செய்த 9 ஆலயங்களுக்கு தலா இரண்டு இலட்சம் வீதம் 18 இலட்சம் ரூபா நிதி ஞாயிற்றுக்கிழமை (29) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிதி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு மேற்படி 9 ஆலயங்களுக்கான காசோலைகளை ஆலய பரிபாலன சபைகளின் தலைவர்களிடம் கையளித்தார்.

மிகுதி நிதி மாவட்டத்திலுள்ள 30 ஆலயங்களுக்கு அந்த ஆலயங்களின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அந்த 30 ஆலயங்களும் புனரமைப்புப் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரக் கடிதங்கள் அமைச்சரினால் இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார், ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சிறீஸ்கந்தராசா, கரைச்சி பிரதேச செயலர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன், ஆலய பரிபாலன சபைகளின் தலைவர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .