2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘தளபதிகள், போராளிகளுக்கு என்ன நடந்தது?’

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்ரமணியம் பாஸ்கரன்  

“இறுதிக்கட்டப் போரின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் உட்பட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.   

இந்தக் கோரிக்கை உட்பட, தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடூரங்கள் தொடர்பில் குரல்கொடுத்தால், தங்களை இனவாதிகளாகவும் வாக்குகளுக்காக குரல்கொடுக்கும் மிகவும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளாகவும் அடையாளப்படுத்த, இராணுவம் முயல்வதாகவும் சிறிதரன் எம்.பி குற்றம்சாட்டினார்.  

கிளிநொச்சியில், செவ்வாயன்று இடம்பெற்ற மரநடுகைச் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை, சுற்றுச் சூழல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மரநடுகை செயற்றிட்டம், வட மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் கார்த்திகை மாதம் இறுதி வரை இடம்பெறவுள்ளது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “மரநடுகை மாதத்தின் இன்றைய நாள், மகிழ்ச்சியான நாளாக இருந்தாலும், மிகுந்த கவலையும் எங்களோடு வாழ்ந்தவர்களின் நினைவுகளும் எம்மைச் சுற்றியிருக்கின்ற ஒரு நாளாகவுமே இருக்கின்றது. கோடாரிக் காம்புகள் போல் இல்லாது, தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் மாத்திரமே, தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று, மேலும் வலியுறுத்தினார்.

கிளிநொச்சி, கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் குருகுலராஜா, வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளார்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

“சொந்த மண், சொந்த மரங்கள்” எனும் தொனிப்பொருளில், உள்ளூர் மரங்கள் உயிர்ச் சூழலின் உயிர்நாடி எனும் வகையில், “ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்ற வாசகத்துடன், இவ்வருடத்துக்கான மர நடுகை மாதம், கார்த்திகை 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .