2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'விமல தேரர் பேரினவாத சக்திகளின் முகவர்'

Niroshini   / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலையத்தில் 13ஆம் திகதி இடம்பெற்ற பத்திரிiயாளர் சந்திப்பில், யாழ். மாவட்ட அனைத்து மதப் பேரவையின் பௌத்த மத பிரதிநிதி விமல தேரர் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் வெளிவந்துள்ள கருத்துக்கள், தென்னிலங்கை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் முகவராகவே அவர் செயற்படுகின்றார் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்ற விடயத்தை புரிந்து கொள்ளாதவர் போலவே தேரர் இயங்குகிறார்.

தமிழர் தாயகமான வடக்கில் சிங்களவர் வாழுகின்ற பகுதிகளில் விகாரைகள் சிறப்பாக இயங்குகின்றன. பாதுகாப்பு தரப்பினரின் முகாம்களில் அவர்களினது வழிபாட்டுக்காக விகாரைகள் உள்ளன. அவற்றை தமிழர்கள் யாரும் எதிர்க்கவில்லை.

தமிழர்கள் எதிர்ப்பதானது, பாதுகாப்பு தரப்பினரால் அடாத்தாக கைப்பற்றப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படும்போது எச்சங்களாக வழிபாட்டுத் தலங்களை விட்டுச்செல்வதையும் சிங்களவர்களே இல்லாத கிராமங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் ஆளுகைக்குட்படாத நிலங்களில் அதுவும் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களில் அத்துமீறிய நிலையில் புத்த விகாரைகள் அமைப்பதையும்தான். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை திரிபுபடுத்தி பௌத்த மத வெறித்தனத்தை நியாயப்படுத்த முனைகின்ற விமல தேரர் போன்ற சகல பிக்குகளுமே கண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

விமல தேரர் என்பவர் உண்மையிலேயே நல்லிணக்கத்தை விரும்புகின்ற, ஏற்படுத்த முயற்சிக்கின்ற ஒருவராக இருப்பாரானால், தமிழர்களின் கிராமமான கொக்கிளாயில், நீதித்துறையின் ஆணையை மீறி, அத்துமீறி சிங்கள படையினரின் உதவியுடன் பௌத்த தேரர் ஒருவரால் தொடர்ந்து கட்டப்பட்டு வரும் விகாரையின் நடவடிக்கைகளை நிறுத்தி இலங்கையில் உள்ள பௌத்த மத தலைவர்கள் தங்களுடைய அரசின் சட்டத்தை மதிப்பவர்கள் என்பதை முதலில் நிரூபிக்கட்டும். அப்போதுதான் அவரின் கருத்துப் பெறுமதியானவையாக  அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .