2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

'மக்களுக்கு நிவாரணம் வழங்காது தமிழ் கிராமத்தை வெலிஓயாவுடன் இணைக்க முயற்சி'

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)
'முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கும் நிலையில் வெலிஓயாவில் புதிதாக அமைக்கப்படவுள்ள பிரதேச செயலகத்திற்கு தமிழ் கிராமங்களை உள்வாங்குவதற்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றனர்' என பாண்டியன்குளம் பிரதேசசபை உபதலைவர் சி.செந்தூரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அனைத்து கிராம சேவகர் பிரிவும் வெள்ளத்தால் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் சிராண்டிக்குளம் கிராமம் முழுமையாக நீரில் முழ்கியுள்ளது. அம் மக்களுக்கான எவ்வித நிவாரணமும் வழங்கப்படவும் இல்லை. பிரதேச சபையினால் அம் மக்களின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டு எம்மாலான உதவிகளை வழங்குவற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

இதேவேளை பேரூந்துகள் சில கிராமங்களுக்கு செல்கின்றது. ஆனால் பல கிராமங்கள் எவ்வித போக்குவரத்துமின்றி காணப்படுகின்றது. நட்டன்கண்டல் கிராமமும் வேறு சில கிராமங்களிலும் வர்த்தக நிலையங்கள் உட்பட வீடுகள் சேதமடைந்துள்ளன.

சில கிராமங்களில் சிறு குளங்கள் பாதிப்படைந்துள்ளன. அக்குளங்களை பாதுகாப்பதற்காக திணைக்களங்கள் வருகை தராதபோதிலும் பொது மக்கள் நீரை வெளி;யேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பலநோக்கு கூட்டுறவு சங்கங்களை நிவாரணம் வழங்குவதற்கு உசார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இது வரை எது வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் வெலிஓயாவில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பிரதேச செயலகத்திற்கு கரைத்துறைப்பற்று பிரதேசசெயலகத்தில் இருந்து தமிழ் கிராமங்களை இணைப்பது தொடர்பான செயற்பாடுகள் மும்முறமாக இடம்பெற்று வருவதுடன் அனைத்து அதிகாரிகளும் அவ்வேலையிலேயே கரிசனை கொண்டும் உள்ளனர்' எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X