2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

ஜனநாயக அடக்குமுறைகளுக்கு எதிராக மூவின மக்களும் ஐக்கியப்பட்டு குரல் கொடுக்கவேண்டும்: சிவசக்தி எம்.பி.

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

ஐனநாயக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் உரிமைக்காகவும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு குரல் எழுப்பவேண்டிய காலம் வந்துள்ளது. ஐனநாயக முற்போக்கு சக்திகளும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து இந்த நாட்டில் அமைதியான சமாதானத்தை நிலைநாட்ட பாடுபடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மாந்தை கிழக்கு பாலிநகர் கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தற்போது நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நீண்டகாலமாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் உரிமைக்காக மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்களோடு ஐனநாயக ரீதியிலும் ஆயுத போராட்டத்திற்கூடாகவும் உரிமைக்காக போராடி மறுக்கப்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் இன்று சிங்கள மக்கள் தங்களுடைய உரிமைக்காக தங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசிற்கு எதிராக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் முகப்பூச்சுக்காக சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் பல சிரமத்தின் மத்தியில் உறவுகள் உடைமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மீள்;குடியமர்த்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் குப்பி விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்கவேண்டிய நிலையே காணப்படுகின்றது. வடக்கின் வசந்தத்தில் மின்சார வசதிகள் செய்து கொடுப்பதாக கூறி மின்கம்பங்கள் நாட்டப்பட்டு ஒரு வருடகாலமாகியும் இதுவரைகாலமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாந்தை கிழக்கு பிரதேசத்தின் பாலிநகர் பகுதியில் பத்து கடைத்தொகுதி சந்தை வசதிகளுடன் கூடிய திட்டம் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டது இத்திட்டத்திற்காக உலக வங்கி ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தது. இத்திட்டம்; அமைச்சர் ஒருவர் தலையீட்டில் முடக்கப்பட்டது. இந்த செயற்பாடு தமிழ் சமூகத்தின் உரிமைகளை தட்டி பறிக்கும் இழிவான செயல்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X