2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

இராணுவ அராஜகம் மேலோங்கியுள்ளது: ஜே.வி.பி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம், ரொமேஸ் மதுசங்க


'ஜனநாயகம் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இராணுவ அராஜகமே மேலோங்கியுள்ளது. புனர்வாழ்வுக்குப் பின் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் தொடர்பில் கிராமங்களுக்குச் சென்று விசாரணை நடத்தும் அளவுக்கு இந்த இராணுவ அராஜகம் மேலோங்கியுள்ளது' என்று சகோதரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பின் உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெந்தி தெரிவித்தார்.

சகோதாரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வவுனியா, ரோயல் காடின் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில்,

'வடக்கு கிழக்கு பிரதேசமென்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இங்கு வாழும் மக்கள் யுத்தத்தின் பிடியில் சிக்கி தவித்து 2009ஆம் ஆண்டு இந்த இராணுவத்தை நம்பி, அரசாங்கத்தை நம்பி வந்த போது ஜனநாயகத்தை பெற்று தருகின்றோம், சுதந்திரத்தை பெற்று தருகின்றோம் என்று கூறியவர்கள் இன்று அந்த ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு மக்கள் மீது அராஜகத்தை பிரயோகித்து இருக்கின்றார்கள்.

அந்த அராஜகத்தின் விளைவாகவே மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்கள் மீண்டும் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். இறுதியாக மெனிக்பாமில் இருந்த 178 குடும்பங்களை சேர்ந்த 611 பேர் இருந்தபோது அவர்களை மீள்குடியேற்றி விட்டோம் இந்த நாட்டில் அகதிகள் இல்லை. அகதி முகாம்கள் இல்லை என இந்த அரசாங்கம் சொல்லிக்கொண்டது.

ஆனால் அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தேடிப்பார்க்கும் போது அவர்கள் முல்லைத்தீவில் கேப்பாபிலவு பிரதேசத்தில் மீளவும் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். அனைவரும் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.

அது மாத்திரமல்ல அன்று மெனிக்பாம் மாத்திரமே அகதிமுகாமாக இருந்தது. இன்று மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்க்கும்போது வன்னி பிரதேசம் முழுவதும் அகதிமுகாமாக மாறியிருக்கின்றது. வன்னி முழுவதும் கூடாரங்களால் நிரம்பி வழிகின்றது.

இந்த மக்களுக்கு புனர்வாழ்வு அழிக்கப்படவில்லை என்பது இந்த பிரசேத்திற்கு சென்று பார்வையிடுபவர்களுக்கு நன்றாகத்தெரியும். எனவே நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அவர்களுக்குரிய காணிகளை  வழங்க வேண்டும். புதுக்குடியிருப்பு பிரசேத்தை சென்றுபார்க்கின்றபோது அங்கு முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இந்த பிரதேசத்தில் 2600 ஏக்கர் நிலம் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. இவை 1000 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள். இந்த 1000 குடும்பங்களையும் அகதிகளாக்கி விட்டு அநாதைகளாக்கி விட்டு இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.

இந்த காணிகளில் இராணுவத்தினர் என்ன வயல் செய்யப்போகின்;றாகளா? மீன் பிடிக்கப் போகின்றார்களா? அல்லது வேறேதும் விவசாயம் செய்யப் போகின்றார்களா? இல்லை. அவ்வாறு இருக்கும்போது இந்த மக்களின் காணிகளை அபகரித்து விட்டு அவர்களை வேறு இடத்தில் குடியேற்றியுள்ளார்கள். இதனை சகோதரத்துவத்தின் மக்கள் அரண் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்' என தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சந்திரசேகரன்,

"1990ஆம் ஆண்டு யூன் மாதம் 11 ஆம் திகதி முதல் இந்த நாட்டில் சிவப்பு மண் நிறைந்த விவசாய நிலமான வளம் கொழிக்கும் செல்வந்த பூமியான  யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசம் இராணுவ உயர் அதிகாரிகளின் பிரதேசமாகவும் அதியுயர் பாதுகாப்பு வலயமுமாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு அனாதைகளாக ஆக்கப்பட்டவர்கள் சுன்னாகத்தில் உள்ள அகதி முகாமில் இன்றும் வாழ்கின்றார்கள்.

அவர்களில் ஒருவர் கூறுகின்றார் தான் வரும்போது 15 வயது என்று. ஆனால் இன்று அவருக்கு குழந்தைகள் இருக்கின்றது. அந்த குழந்தைகள் பிறந்ததும் வளர்ந்ததும் இந்த அகதி முகமிலேயே ஆகும்.

எனவே நாங்கள் இழந்த சுதந்திர காற்றைக் கூட இந்த பிள்ளைகளுக்கு கூட கொடுக்க இந்த அரசாங்கம் மறுத்திருக்கின்றது. அதனாலேயே நாம் குறிப்பிட்டு சொல்கின்றோம் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை உடனடியாக அந்த மக்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் சொல்கின்றது வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு பூரணமாக ஜனநாயகத்தை பெற்று கொடுத்துவிட்டோம் என்று. ஆனால் நாம் கூறுகின்றோம். இல்லை. ஜனநாயம் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பழ்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சகோதாரத்தவத்தின் மக்கள் அரணாக நாம் கேட்டுக்கொள்வது உடனடியாக இந்த மாணவர்களை விடுதலை செய் என்பதையே.

இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்ட நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்க இராணுவ படைகளை அத்துமீறி யாழ் பழ்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்க செய்து மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.

அது தொடர்பில் மாணவர்கள் தமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுவதற்கு ஜனநாயக ரீதியான மறுநாள் மேற்கொண்ட போராட்டம் மீதும் இராணுவமும் பொலிஸாரும் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிந்தோம். ஏன் இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய்பட்டார்கள் என்று பார்க்கும்போது மாணவர்கள் பல்வேறான கருத்துக்களை கொண்டவர்கள் அதிலும் பல்கலைக்கழகம்  புத்தியீவிகள் உருவாகும் இடம்என்பதனால் அந்த நிலையை குழியோண்டி புதைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவே இவ்வாறான கைதாகும்.

இன்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளையும் சிறைகளில் இருந்து விடுதலையானவர்களையும் விசாரணை செய்வதற்கென்று கொழும்பில் இருந்து உளவு பிரிவினர் வந்து விசாரணை செய்கின்ற நிலை காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்னவென்றால் இன்று  இந்த அரசாங்கம் பெரும் நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றது. இந்த நாடு பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது. பொருளாதார ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு வழங்க முடியாது என்ற காரணமாக மக்கள் போராட்டம் ஆங்காங்கு வெடிப்பது தவிர்க்க முடியாது.

யாரும் உரிமைகளை கேட்பதை தடுக்க முடியாது எனவே அவ்வாறு போராடும்போது மறுபறத்தில் இனவாத பேயை அல்லது இனவாத தீயை எரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள்.

இந்த அரசாங்கம் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்க முடியாத அரசாங்கம். எனவே இந்த அரசாங்கத்திடம் மீண்டும் சென்று எமது உரிமைகளை தாருங்கள் என மண்டியிட்டு கேட்பதால் மாத்திரம் தந்து விடப்போகின்றவர்கள் இல்லை.

எனவே தனித்தனியாக போராடுவதன் மூலமாக எந்த ஒரு திர்வையும் பெற்று விட முடியாது என்பதனால் ஜனநாயக சக்திகளும் முற்போக்கு சக்திகளும் சேர்ந்து இந்த குடும்ப அரசிற்கு எதிராக சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவோம்" என தெரிவித்தார்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் வன்னி அமைப்பாளர் மற்றும் சகோதாரத்துவத்திற்கான மக்கள் அரணின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0

  • K.Balendran Friday, 18 January 2013 11:22 AM

    தனக்கு தனக்கு எண்டால் சுளகு படக்கு படக்கு எண்டு அடிக்குமாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X