2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

'பூநகரியின் வரட்சியை போக்க இரணைமடு தண்ணீர் தேவை'

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்;திலிருந்து குடிநீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என பூநகரி பிரதேச சபைத் தலைவர் மற்றும் பூநகரி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரைக் கொண்டு செல்வது சம்பந்தமான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (29) கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பூநகரி பிரதேச சபைத் தலைவர் மற்றும் பூநகரி விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், 'பூநகரிப் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் அடங்குகின்ற பிரதேசமாக இருக்கின்றது.

பூநகரிப் பிரதேசத்தில் நிலவும் கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடிநீருக்கு அலைந்து திரிகின்ற நிலையில்இரணைமடு குளத்து நீரினை எமது பிரதேசத்தின் தேவையை நிறைவு செய்யாத நிலையில்  வேறு பிரதேசத்திற்கு எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?' என்று கேள்வி எழுப்பினர்.

'யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பில் எமக்கு ஆட்சேபனையில்லை. எனினும் முதலில் எமது பிரதேசத்தின் தேவையை பூர்த்தி செய்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நீரினைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமுடையதாக இருக்கும்' என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து நீரினை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்களும் ஆட்சேபனை தெரிவித்தது. கிளிநொச்சி மாவட்ட விவசாயத் தேவைக்கே போதியளவு நீர் வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுக்குளத்திலிருந்து நீரை விநியோகம் செய்ய முடியும் என்ற கேள்வியுள்ளது.
 
கிளிநொச்சி மாவட்டத்தில்; 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சிறுபோகத்தில்  நீர்ப்பாசனத்தை நம்பியே விதைக்கப்படுகின்ற போதும், 8 ஆயிரம் ஏக்கரில் இருந்து 10 ஆயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கே நீர் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. இரணைமடு நீர் கிளிநொச்சியில் சிறுபோகம் செய்வதற்கே போதுமானதாகவில்லை.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்வது என்பது கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்த்தேவை பூர்த்தி செய்தபின்னரே நடைபெற வேண்டும். இந்த விடயம் பிரதேச முரண்பாட்டினை ஏற்படுத்துவதாக அமைவதினால் சரியான பொருத்தப்பாடுடைய முடிவு எடுக்கப்படுவது சிறந்தது என கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .