2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பொன்தீவு கண்டல் கிராமத்தில் மீள்குடியேற்றம் இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 30 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் வேற்று மதத்தவரை குடியமர்த்துவதான நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அக்கிராம மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்தே இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அக்கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மீள்குடியேற்றம் செய்யப்படவிருந்த காணிகளுக்குகள் எவரும் செல்ல வேண்டாம் எனவும் நானாட்டான் பிரதேச செயலகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், முருங்கன் பொலிஸார் குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெக்கப்பட்டு வருவதாக கூறி அக்கிராம மக்கள் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன் கூடிய இக்கிராம மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 1866ஆம் ஆண்டு குடியேறிய பொன்தீவு கண்டல் கிராம மக்கள், தங்களது கிராமத்தில் வேற்று மதத்தைச் சார்ந்த  மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாகவும் இதற்கு நானாட்டான் பிரதேச செயலாளர் துணை போவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பொன்தீவு கண்டல் கிராம மக்களின் பிரதிநிதிகளுக்கும் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சந்திரையாவுக்கும் இடையில் அன்றைய தினம் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

அந்த சந்திப்பில் மன்னார் நகரசபை முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், நகரசபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற பேர்ச்சுவார்த்தையின் பின் குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக நானாட்டான் பிரதேச செயலாளர் உறுதியளித்திருந்தார்.

தற்போது காணி வழங்கப்பட்ட வேற்று மத மக்களை மதங்களுக்கிடையில் பிரிவினைவாதம் ஏற்படாதவாறு குறித்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக நானாட்டான் பிரதேச செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்திற்கு அருகாமையில் குறித்த வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்காக அரச காணிகள் உள்ளதா என்பது தொடர்பான ஆராய்சிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த காணிகள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அந்த மக்கள் அவ்விடத்திலேயே குடியேற்றம் செய்யப்படுவார்கள் எனவும் பிரதேச செயலாளர்; தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை குறித்த பகுதிக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் என்.குணசீலன் ஆகியோருடன் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சந்திரையாவும் அக்கிராமத்துக்குச் சென்றனர்.

ஒரு சில தினங்களில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேசச் செயலாளர், மற்றும் கிராம மக்களுக்கிடையில் அவசர சந்திப்பொன்று இடம் பெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நானாட்டான் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X